ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் "தர்பார்". இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். சமீபத்தில் "தர்பார்" படத்தில் இருந்து வெளியான "சும்மா கிழி" பாடல் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. இந்நிலையில் "தர்பார்" படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் அனிரூத் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். 

சூப்பர் ஸ்டார் பங்கேற்கும் விழான்னா சாதாரணமா?, சும்மா அதிரும் இல்ல. நிகழ்ச்சி தொடங்குவதற்கு வெகு நேரம் முன்னதாகவே நேரு ஸ்டேடியத்தில் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் குவிய ஆரம்பித்துவிட்டனர். தலைவரை காண காத்திருக்கும் நேரத்தில், ஸ்டேடியம் முன்பு வைக்கப்பட்டுள்ள தர்பார் பட போஸ்டர் முன்பு நின்று விதவிதமான செல்ஃபிக்களை எடுத்து, சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். 

பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் அதிரடியாக அரசியல் பேசிய ரசிகர்களை சூடேற்றினார். தளபதியே அப்படின்னா, சூப்பர் ஸ்டார் சும்மா இருப்பாரா?, கண்டிப்பா அவர் சொன்னா அதிசயம் பற்றி அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் கூட்டம் நேரு ஸ்டேடியத்தை மொய்த்துவருகிறது. எப்போது வேண்டுமானாலும் அதிசயம் நடக்கலாம் என்று கூறியிருந்த ரஜினி, இந்த விழா மேடையில் கூட அரசியல் குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.