சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கொரோ வைரஸ் விழிப்புணர்வு குறித்தும், மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவு கோரியும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2வது கட்டத்தில் உள்ளது. அது மூன்றாவது கட்டத்திற்கு போய்விடக்கூடாது. கொரோனா வைரஸ் 12 மணி நேரத்தில் இருந்து 14 மணி நேரம் அது பரவாமல் இருந்தாலே மூன்றாவது கட்டத்திற்கு பரவாமல் தவிர்க்க முடியும். அதனால் தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மக்கள் ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

இதே போல் தான் இத்தாலியில் கொரோனா வைரஸின் தாக்கம் 2வது கட்டத்தில் இருந்த போது அந்நாட்டு அரசு மக்களை ஊரடங்கு உத்தரவில் பங்கேற்கும் படி அழைப்பு விடுத்தது. ஆனால் அவர்கள் அதை முக்கியமானதாக கருதாமல் உதாசீனப்படுத்திவிட்டனர். அதனால் தான் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியானது”. 

“அப்படி ஒரு நிலைமை இந்தியாவிற்கு வரக்கூடாது. அதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வரும் 22ம் தேதி ஊரடங்கு உத்தரவிற்கு ஆதரவளிக்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உயிரையும் பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரை பிரதமர் மோடி அவர்கள் கூறியது போல, மனதார பாராட்டுவோம்” என்று கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த வீடியோவில் விதிமீறல்கள் இருப்பதாக காரணம் கூறி ட்விட்டர் நிர்வாகம் வீடியோவை நீக்கிவிட்டது.மற்றொரு ட்வீட்டில் தான் வீடியோவில் பேசிய தகவலை ஆங்கிலத்தில் ஒரு கடிதமாக வெளியிட்டு, அதனுடன் யூடியூப் தளத்தில் தான்  பேசியதிற்கான லிங்க்கையும் ரஜினி கொடுத்திருந்தார். அந்த ட்வீட்டையும் நீக்கிவிட்டது ட்விட்டர் தளம். இதனால் ரஜினி ரசிகர்கள் பலரும் ட்விட்டருக்கு எதிரான ஹேஷ்டேகுகளைக் பயன்படுத்தி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “நேற்று பதிவு செய்த காணொளியில் 12-14 மணி நேரம் மக்கள் வெளியில் நடமாடாமல் இருந்தாலே கொரோனா வைரஸ் பரவுவது தடைபட்டு, சூழல் மூன்றாம் நிலைக்கு செல்வது தவிர்க்கப்படலாம் என்று நான் கூறியிருந்ததால் அது ‘இன்று மட்டும் அப்படி இருந்தாலே போதும்’ என்று பரவலாக புரிந்துகொள்ளப்பட்டு அதிகம் பகிரப்பட்டது. இதனால் ட்விட்டர் நிர்வாகம் அதை நீக்கியுள்ளது.  நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அரசு பரிந்துரைக்கும் காலம் வரை இன்றைப் போலவே சுய தனிமைப்படுத்துதலை நாம் கவனமாக பின்பற்றி இந்தக் கொடிய வைரஸை வீழ்த்துவதற்கான முயற்சியில் கவனத்தை செலுத்துவோம். இவ்வேளையில் என்னுடைய காணொளியின் நோக்கத்தை புரிந்துகொண்டு ஆதரித்து மக்களிடம் பதிவை சரியான முறையில் கொண்டுசேர்த்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.