கொரோனா பிரச்சனை காரணமாக, கடந்த 3 மாதங்களுக்கு மேல், ரிலீசுக்கு தயாராக இருந்த அனைத்து படங்களும் வெளியாகாமல் உள்ளது. திரையரங்கு மூடப்படுவதற்கு முன், வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்றிருந்த திரைப்படங்களில் ஒன்று 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பிப்ரவரி 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. 

ஹைடெக் திருடர்களை மடக்கும் இரண்டு திருட்டு நாயகிகள், எதிர்பார்க்காத நேரத்தில் வெளிப்படும் சஸ்பென்ஸ், இப்படியெல்லாம் கூட திருட்டு நடக்கிறதா? என யோசிக்க வைத்திருந்தது இந்த படம். மேலும் குறைத்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நல்ல வசூலையும் பெற்று தந்தது. எப்போதும் ஒரு சில சீன்களில் மட்டுமே தலைகாட்டும் கெளதம் மேனன் இந்த படத்தில் ஒரு முழு கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியது மட்டும் இன்றி, இவர் நடித்த சீன், மீம்ஸ் கிரியேட்டர்களால் மிகவும் பிரபலமாகவும் ஆனது.

தற்போது ஓடிடி  தளத்திலும் வெளியாகியுள்ள இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்தின் இயக்குனர் தேசிய பெரியசாமிக்கு,  தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினியின் வாழ்த்தை கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது சமூக வலைத்தளத்தில், ‘"சூப்பர்.. எக்ஸலண்ட்.. ஹா.. ஹா.. ஹா.. வாழ்த்துக்கள்.. பெரிய ஃபியூச்சர் இருக்கு உங்களுக்கு". காலையில் இருந்து இதுமட்டும் தான் கேட்டுகிட்டு இருக்கு காத்துல. பறந்துட்டு இருக்கேன். அனைவருக்கும் நன்றி" என்று பதிவு செய்திருந்தார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரை பதிவு செய்யாத நிலையில், அவர் பதிவு செய்திருந்த முத்திரைகள் மூலம் அது அவர் தான் என்பது உறுதியானது. 

 

இதையும் படிங்க; நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையிலான வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் தேசிங் பெரியசாமியுடன் பேசிய ஆடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "வாழ்த்து தெரிவித்த எல்லாருமே "என்கிட்டயே தலைவர் பேசுனது மாதிரி அவ்வளவு சந்தோஷம்னு சொல்றாங்க". உங்களுடைய அன்புக்கு நன்றி. ஆனால், தனிப்பட்ட முறையில் போன் உரையாடல் லீக்கானதில் சந்தோஷம் இல்லை. ஏனென்றால் அது மிகவும் பெர்சனலான தொலைபேசி உரையாடல். ஆகையால் தான் எனது ட்வீட்டில் கூட நான் தலைவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், துரதிருஷ்டவசமாக உரையாடல் வெளியாகிவிட்டது. எல்லாம் நன்மைக்கே. மீண்டும் உங்களுடைய அனைவரது அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.