‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கானா பாடகர் பூவையார் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது.
‘ராம் அப்துல்லா ஆண்டனி’
‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் திரைப்படங்களில் பின்னணி பாடகர்களாக மாறி உள்ளனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பூவையார் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து இருக்கிறார். அன்னை வேளாங்கண்ணி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் ஜெயவேல் இயக்கும் இந்த படத்திற்கு ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ என பெயரிடப்பட்டுள்ளது.
பூவையார் நடித்துள்ள படங்கள்
கானா பாடல்கள் மூலம் பிரபலமான பூவையாருக்கு ‘பிகில்’ படத்தில் விஜய் உடன் நடனமாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பாடலில் சிறு பகுதியையும் பாடி இருந்தார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்திலும் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு பூவையாருக்கு கிடைத்தது. அதை தொடர்ந்து ‘மகாராஜா’, ‘அந்தகன்’ படங்களிலும் நடித்திருந்தார்.
ஹீரோவாக மாறிய பூவையார்
தற்போது விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 6 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கெடுத்துள்ளார். இந்த நிலையில் அவர் ஹீரோவாக நடிக்கும் ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படம் குறித்த அடுத்த அப்டேட் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. பூவையாருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
