"கோலமாவு கோகிலா", "தர்மபிரபு", "கூர்கா" போன்ற படங்களைத் தொடர்ந்து  யோகிபாபு மீண்டும் காமெடியில் கலக்க களம் இறங்கியுள்ள படம் "50/50".  சாய்கிருஷ்ணா இயக்கியுள்ள இந்த படத்தில் நான் கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், மயில்சாமி, நந்தா சரவணன், மதன் பாப் என ஒரு காமெடி பட்டாளமே நடிக்க உள்ளது. திகில் கலந்த முழுநீள காமெடி படத்தில், யோகிபாபு ரொமாண்டிக் ரவுடியாக நடித்துள்ளார்.இந்தப் படத்தை சினி கிராப்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்த படத்தில் யோகிபாபுவின் இன்ட்ரோ சாங் ஒன்றை விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் பாடியுள்ளார். கோலமாவு கோகிலா கழட்டி விட்ட மன்மதன் என்ற அந்தப் பாடல் பட்டி, தொட்டி எங்கும் வைரலாகி வருகிறது. ஏற்கெனவே பிகில் படத்தில் தளபதி விஜய்யின் இன்ட்ரோ பாடலான வெறித்தனத்தில் பூவையார் பாடிய போர்ஷன் செம்ம ஹிட்டானது. இதனிடையே யோகிபாபுவிற்காக வாய்ஸ் கொடுத்துள்ள பூவையாரை அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பாராட்டி வருகின்றனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கனா பாடல்கள் மூலம் பிரபலமான பூவையாருக்கு இந்த பாடல் மேலும் புகழ் சேர்ந்துள்ளது. 

பட்டி, தொட்டியை எல்லாம் தெறிக்கவிட்டுள்ள பூவையாரின் பாடல் இப்போதே ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள நிலையில், இந்த ஆண்டிற்கான சிறந்த பாடல் வரிசையில் இடம் பிடிக்கும் என்றும் இயக்குநர் சாய் கிருஷ்ணா உறுதியாக தெரிவித்துள்ளார். முழு நீள காமெடி படமான  இது இம்மாதம் 13ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெறித்தனம் வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி வரும் விக்ரம் 58 படத்திலும் பூவையார் ஒரு பாடல் பாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.