முன்குறிப்பு; ஆச்சார மற்றும் கலாச்சாரக்காவலர்கள்  என்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டிருப்பவர்கள் இந்தப்படம் ஓடும் தியேட்டர் இருக்கிற பக்கம் கூட கிராஸ் பண்ணவேண்டாம். ஏனெனில் மொத்தப்படமுமே ஒரு கல்ச்சர் டார்ச்சர்தான். இரட்டை அர்த்த வசனங்களில் ஒளிந்துகொள்ளாமல் நேரடியாகவே அதிக கெட்ட வார்த்தை வசனங்கள் கொண்ட தமிழ்ப்படங்களில் ‘சூ.டீ’வுக்கே முதலிடம்.

தியேட்டர்களில் ரிலீஸான ஒரே வாரத்தில் தூக்கி அடிக்கப்பட்ட, ஆனால் கடந்த எட்டு ஆண்டுகாலமாக இன்னும் ஒரு ஹாட் டாபிக்காக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ‘ஆரண்ய காண்டம்’ தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது படம் இந்த ‘சூப்பர் டீலக்ஸ்’.

படத் திரையிடலுக்கு முன் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தோன்றிய குமாரராஜா,’இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கலாம். பிடிக்காமல் போகலாம். அதன்படி எழுதுவது உங்கள் விருப்பம். படம் நல்லா இருக்குன்னு எழுதுங்க என்று ஒருநாளும் வேண்டுகோள் வைக்கமாட்டேன். ஆனால் இக்கதைகளின் முடிவில் அவிழும் முடிச்சுகளை எழுதினால் அடுத்து படம் பார்க்க வருகிறவர்கள் நீங்கள் அனுபவித்த சுவாரசியத்தை அனுபவிக்க முடியாது என்பதால் அதை எழுதுவதை மட்டும் கூடுமானவரை தவிருங்கள்’ என்றார். அது தலைவணங்கி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றுதான் என்பதைப் படத்தைப் பார்க்கும்போதே உணரமுடியும்.

அதென்ன கதையின் முடிவில்னு சொல்றதுக்குப் பதில் கதைகளின் முடிவில்? யெஸ். சூப்பர் டீலக்ஸில் இடம் பெற்றிருப்பது மூன்று கதைகள். முதல் கதையில்...விரக்தியில் இருக்கும்  தனது கல்லூரிக் கால காதலனை வீட்டில் கணவன் இல்லாத நேரமாக வரவழைத்து செக்ஸ் வைத்துக்கொள்கிறார் சமந்தா. அடுத்த சில நிமிடங்களில் அந்தக் காதலன் படுக்கையிலேயே உயிரை விட, கணவன் ஃபகத் ஃபாசிலும் சமந்தாவும் அந்த உடலை டிஸ்போஸ் செய்யப் புறப்பட்டு என்னவெல்லாம் ஆகிறார்கள் என்று போகிறது.

அடுத்த கதையில்...செக்ஸ் படம் பார்க்க ஸ்கூலுக்குக் கட் அடித்துவிட்டு ஒரு நண்பனின் வீட்டுக்குள் நுழைகிறார்கள் நான்கு பள்ளி மாணவர்கள். அந்த பிட்டுப் படத்தில் தன் தாயைக் காண நேரும் ஒருவன் அந்த டி.வியை கோபத்தில் உடைத்துவிட மாலைக்குள் புதுடி.வியை அதே வீட்டுக்குள் கொண்டுவந்து வைக்கவேண்டிய நெருக்கடியில் அந்த சிறுவர்கள் சின்னாபின்னமாவது...

மூன்றாவது கதை...உண்மையில் இதுவரை உலக சினிமா கூட கண்டிராத ஒன்று என்று அடித்துச்சொல்லலாம். எட்டு வருடங்களுக்கு வீட்டை விட்டு ஓடிப்போன கணவனுக்காக ஐஸ்வர்யா காத்திருக்க, அப்பா இல்லாததால் ஸ்கூல் முழுக்க தன்னை டெஸ்ட் டியூப் பேபி என்று கிண்டலடிக்கிறார்கள் என்று அவரது சின்னஞ்சிறு பையன் காத்திருக்க, வாடகை டாக்ஸியில் வந்து இறங்குகிறார் அந்தக் கணவர் திருநங்கையாக...

வாழ்வின் அடுத்த கணங்களை எந்தக் கொம்பனாலும் யூகிக்க முடியாது என்னும் நிச்சயமற்ற நிலையை ஒரு குரூர மனப்பான்மையுடன் தன்னை ஒரு கடவுளாகவே நினைத்து வடித்திருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. இந்தக் கதைகளில் வரும் எந்தப் பாத்திரத்தின் மீதும் கொஞ்சமும் கருணை அற்றவராக எப்படி இருக்க முடிகிறது என்பது பேராச்சர்யம்.

‘காலையில உன்ன ’போட்டவன்’ பெட்லயே செத்துட்டான். மத்தியானம் உன்னப்போடணும்னு ஆசைப்பட்டதுக்காகவே இந்த போலீஸ்காரனும் செத்துட்டான். இனிமே உங்கூட நான் சேர்ந்து வாழுவேன்னா நினைக்கிற?’ என்று மனைவி சமந்தாவிடம் ஃபகத் கேட்கிற ஒரு சாம்பிள் வசனம் போதும் இது எந்தவகையான படம் என்று சொல்ல. மொத்தப் படத்திலும் அநியாயத்துக்குக் கெட்டவார்த்தைகள் இருந்தாலும் அவை அனைத்தும் கதைக்கு மிக மிகத் தேவையானவை என்பதால் முதல் முறையாக தேங்க்ஸ் சார் மிஸ்டர் சென்ஸார். 

பாத்திரங்களில் அந்தப் பொடிப்பயல்கள் உட்பட அத்தனை பேரும் வாழ்ந்திருக்கிறார்கள் என்றாலும் மார்க் பிரகாரம் விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் ஃபாசில், ஐஸ்வர்யா என்று வரிசைப்படுத்தலாம்.

ஒளிப்பதிவு பி.எஸ்.வினோத், நிரவ் ஷா. நேர்த்தியின் உச்சம். இயக்குநரின் இரு கண்களாகவே ஆகியிருக்கிறார்கள். பின்னணி இசையில் யுவன் ஷங்கர் ராஜாவின் பெஸ்ட் இந்தப் படம் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

2.56 நிமிடங்கள் ஓடுகிற இப்படத்தில் இடைவேளைக்குப் பின்னர் ஒரு சில காட்சிகளில் தொய்வு இருக்கிறது என்று சொல்ல முயலும்போது மனசாட்சி தடுக்கிறது. சூப்பர் டீலக்ஸ் தமிழ் சினிமாவின் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கும் மிக மிக முக்கியமான படம். முதல் படத்தில் பவுண்டரி அடித்த குமாரராஜா இப்படத்தில் செக்ஸியான சிக்ஸர் அடித்திருக்கிறார்.