தமிழ் சினிமாவில் நடிகர் நகுலுக்கு ஜோடியாக, கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. இந்த படத்தின் வெற்றிக்கு பின் மீண்டும், நகுலுக்கு ஜோடியாக 'மாசிலாமணி',  விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக 'நீர்ப்பறவை' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில் பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும், சிறிய வேடங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். அதன் அடிப்படையில்,  இயக்குனர் அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான,  'தெறி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதே போல் சமீபத்தில் வெளியான 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில், இவருடைய கதாப்பாத்திரம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது. மேலும் இன்று இவர் நடிகர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்துள்ள 'சில்லு கருப்பட்டி' திரைப்படத்திற்கும் நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க, சுனைனா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்தார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறதே அது உண்மையா? என்பது போல் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் கொடுத்த நடிகை சுனேனா, முறையான அறிவிப்பு எதுவும் இன்றி திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார்.  இப்படி வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறி  கடந்த சில மாதங்களாகவே இவருக்கு ரகசிய திருமணம் நடைபெற்று விட்டதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.