மெகா பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் கூட்டணியின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’படப்பிடிப்பு நேற்றோடு பேக் அப் ஆன நிலையில் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பணியாற்றிய செம்பியன் அப்பதவியிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டு பேக் அப் செய்யப்பட்டுள்ளார்.சன் பிக்சர்ஸின் இதற்கு முந்தைய பிரம்மாண்ட தயாரிப்பான ‘சர்க்கார்’ஆடியோ வெளியீட்டு விழாவில் கலாநிதி மாறனால் மேடையில் மிக அதிக முறை உச்சரிக்கப்பட்ட பெயர் இந்த செம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிக்சர்ஸ் வருடத்துக்கு இரண்டு முதல் மூன்று முக்கிய, பெரும்பட்ஜெட் படங்களைத் தயாரித்து வருகிறது. இப்போதைய தயாரிப்பிலுள்ள சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் கூட்டணியின் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’படப்பிடிப்பு நேற்றோடு முடிவடைந்ததாக அப்பட நாயகி அனு இம்மானுவேல் தனது ட்விட்டர் பக்கத்தில் கேக் வெட்டிக்கொண்டாடிய படங்களுடன் வெளியிட்டிருந்தார். இப்படம் இம்மாதம் 27ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவரும், மறைந்த தயாரிப்பாளர் கோவை செழியனின் மகனுமாக செம்பியன் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்குப் பதிலாக சாந்தி என்பவர் அப்பதவியில் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கலாநிதி மாறனின் மனைவி காவேரியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்றும் சொல்லப்படுகிறது.

செம்பியனுக்கு முன்னர் சரத் சக்ஸேனா சன் பிக்சர்ஸின் தலைமை அதிகாரியாக நீண்ட காலம் கொடிகட்டிப் பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.