மலையாள திரையுலகில் எடிட்டாராக இருந்து இயக்குநராக அவதாரம் எடுத்தவர் ஷா நவாஸ். கேரள மாநிலத்தைச் சேர்ந்த நாரணிபுழா ஷாநவாஸ் இயக்கிய கரி திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சாதிய பாகுபாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 2015ம் ஆண்டுக்கான தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.   மலையாளத்தில் முதன் முறையாக ஓடிடியில் வெளியான திரைப்படம் ‘சூஃபியும் சுஜாதாயும்’. கடந்த ஜூலை மாதம் வெளியான இந்த திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. 

ஜெயசூர்யா, அதிதி ராவ் ஹைதாரி, தேவ் மோகன், சித்திக் உட்பட பலர் நடித்திருந்த இந்த படத்தை நரனிபுழா ஷாநவாஸ் என்பவர் இயக்கியிருந்தார். சமீபத்தில் தனது அடுத்த பட கதைக்காக ஷாநவாஸ் அட்டப்பாடி வந்துள்ளார். அங்கு அவருக்கு கடந்த சனிக்கிழமை நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து கோவையில் உள்ள கே.ஜி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவிகளுடன் ஷாநவாஸுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தும் ஷா நவாஸ் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே நேற்று வென்டிலேட்டர் உள்ளிட்ட உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் ஷா நவாஸை கொச்சியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற திட்டமிருந்தனர். இந்நிலையில் நேற்றிரவே  அவருடைய உயிர் பிரிந்தது. இதனால் ஓட்டுமொத்த மலையாள திரையுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. கேரள் முதலமைச்சர் பினராயி விஜயன், ‘சூஃபியும் சுஜாதாயும்’ பட நடிகர்களான ஜெய சூர்யா, அதிதி ராவ் உள்ளிட்ட பலரும் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.