நகைச்சுவை நடிகர் செந்திலுக்குச் சொந்தமான சர்வீஸ்டு அபார்ட்மெண்ட்ஸை தன்னுடையது என்று கூறி உள்வாடகைக்கு விட்ட திரைப்பட தயாரிப்பு நிர்வாகி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இயக்குநர் சுந்தர்.சியின் பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரைப்பட காமெடி நடிகர் செந்திலுக்கு சொந்தமான கட்டிடம், சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், பாஸ்கர் காலனி, 3-வது தெருவில் உள்ளது. மொத்தம் 10 அறைகள் கொண்ட அந்த கட்டிடத்தை 2013-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சகாயராஜ் (வயது 52) என்பவர் மாதம் ரூ.2½ லட்சம் வாடகைக்கு எடுத்து இருந்தார்.கடந்த சில மாதங்களாக சகாயராஜ், செந்திலுக்கு வாடகை பணம் தரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நடிகர் செந்தில், கட்டிடத்தை நேரில் சென்று பார்த்தார். அந்த சமயத்தில் சகாயராஜ் செந்திலைச் சந்திக்காமல் தலைமறைவாகியிருந்தார்.

அப்போது செந்தில் உள்ளே புகுந்து விசாரணை நடத்தியதில், அந்த கட்டிடத்தை தன்னிடம் வாடகைக்கு எடுத்த சகாயராஜ், அது தனக்கு சொந்தமானது என்று கூறி அதில் உள்ள 7 அறைகளை மேல் வாடகை மற்றும் குத்தகைக்கு விட்டு கூடுதல் பணம் பெற்று இருப்பது தெரிந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில், இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நந்தினி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அதில் சகாயராஜ், நடிகர் செந்திலின் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்டது உண்மை என தெரியவந்தது.இதையடுத்து விருகம்பாக்கத்தில் பதுங்கி இருந்த சகாயராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான சகாயராஜ், சினிமா துறையில் புரொடக்சன் மேலாளராக பணிபுரிந்து வந்தவர். குறிப்பாக இயக்குநர் சுந்தர்.சி.யின் பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாகப் பணிபுரிந்தவர்.