ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசுகையில், நடிகர் விஜய் ஷூட்டிங் வரும்போது, நான் அவரை நிறைய கோவில்களுக்கு அழைத்து செல்வேன் என கூறி இருக்கிறார்.

Kanal Kannan about Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராக வலம் வந்தவர் கனல் கண்ணன். இவர் நடிகராகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில், தற்போது ஆன்மிகத்தில் ஆர்வம் காட்டி வரும் கனல் கண்ணன், சொந்தமாக கோவில் ஒன்றையும் கட்டி இருக்கிறார். இந்த கோவில்களுக்கு விஜய், நயன்தாரா என ஏராளமான பிரபலங்கள் வந்திருப்பதாக கூறிய அவர், விஜய் பற்றி பலரும் அறிந்திடாத ஒரு ஆச்சர்ய தகவலையும் கூறி இருக்கிறார்.

அவர் கூறியதாவது : “விஜய், மதம் சம்பந்தப்பட்ட ஆள் கிடையாது. அவர் ரொம்ப நல்ல மனிதர். 1996-ல் வட பழனி சிவன் கோவிலில் நான் நிர்வாக பதவியில் இருந்தபோது, அந்த சமயத்தில் பங்குனி உத்திர திருவிழாவுக்கு பெரிய விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். அதற்கு விஜய் சார் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அங்கு வந்து சாமிக்கு மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து, அவருக்கு பட்டை போட்டு, மரியாதை செய்து அனுப்பிவைத்தேன். ரொம்ப நல்ல மனிதர், அவர் மதம் சம்பந்தப்பட்ட ஆள் கிடையாது. ஷூட்டிங் வரும்போதெல்லாம் நிறைய கோவில்களுக்கு அவரை நான் அழைத்து சென்றிருக்கிறேன்”: என கூறி உள்ளார்.

கோவில் கட்டிய கனல் கண்ணன்

அதேபோல் மதுரவாயலில் இந்த கோவில் அமைந்த கதையையும் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் கனல் கண்ணன். கோவில் கட்ட முடிவெடுத்த சமயத்தில் சிம்புவின் சரவணா படத்தில் பணியாற்றி இருக்கிறார் கனல் கண்ணன். அப்போது அப்படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரை சந்தித்து இதுபற்றி சொல்லி, அதற்காக முதல் டொனேஷனாக நீங்கள் தான் காசு தர வேண்டும் என கேட்டிருக்கிறார். அதற்கு அவர், நீ கோவில் கட்டுறியா என சிரித்துக்கொண்டு சென்றுவிட்டாராம்.

பின்னர் மறுநாள் காலை விஜிபி-யில் ஷூட்டிங் நடந்திருக்கிறது. அப்போது டேய் கண்ணா இங்க வா என அழைத்து ஒரு பண்டலை கொடுத்திருக்கிறார் ரவிக்குமார். கனல் கண்ணனும் அது என்னவென்று தெரியாமல் காரில் போட்டுவிட்டு வேலை செய்திருக்கிறார். பின்னர் வீட்டில் சென்று பார்த்தபோது தான் அந்த பண்டல் முழுக்க காசு இருப்பது தெரிந்திருக்கிறது. அந்த பண்டலில் மொத்தம் 61 ஆயிரம் பணம் இருந்ததாக கனல் கண்ணன் தெரிவித்துள்ளார். இப்படி சினிமா பிரபலங்களிடம் டொனேஷன் வாங்கியதோடு, தன்னுடைய சொந்த பணத்தையும் செலவு செய்து இந்த கோவிலை கட்டியதாக அவர் கூறி உள்ளார்.