சிம்புவின் எஸ்.டி.ஆர் 50 திரைப்படத்தை இயக்குவதாக இருந்த தேசிங்கு பெரியசாமி, திடீரென இளம் நடிகருடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Desingh Periyasamy Next Movie : கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த தேசிங்கு பெரியசாமி. தன்னுடைய அடுத்த படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ளதாக கடந்த 2023-ம் ஆண்டு அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பு வெளியாகி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை அவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. முதலில் இப்படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது.

பின்னர் அவர் இப்படத்தில் இருந்து விலகியதை அடுத்து சிம்புவே இப்படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்தார். இதற்காக ஆத்மன் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி உள்ளார் சிம்பு. இப்படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம். இது சிம்புவின் 50வது படமாக தயாராக உள்ளது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறினர். ஆனால் அதற்குள் சிம்பு வெற்றிமாறன் படத்தில் இணைந்துவிட்டதால், தற்போது எஸ்.டி.ஆர் 50 திரைப்படத்தை ஓரங்கட்டிவிட்டார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தேசிங்கு பெரியசாமியின் அடுத்த படம்

ஏனென்றால் சிம்புவுக்காக பல வருடங்களாக காத்திருந்த தேசிங்கு பெரியசாமி தற்போது நடிகர் மணிகண்டன் உடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஜெய் பீம், குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் என தொடர்ச்சியாக நான்கு ஹிட் படங்களை கொடுத்த மணிகண்டன். தற்போது தேசிங்கு பெரியசாமி உடன் இணைய உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மறுபுறம் சிம்பு படம் என்ன ஆச்சு என்கிற கேள்வியும் எழத்தொடங்கி உள்ளது.

சிம்பு, வெற்றிமாறன் படத்தை முடித்துவிட்டு வருவதற்குள் மணிகண்டன் படத்தை தேசிங்கு பெரியசாமி எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன்பின்னர் எஸ்.டி.ஆர் 50 திரைப்படத்தை அவர் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் சிம்புவுக்கு மிகவும் பிடித்த கதை என்பதால் அவர் எஸ்.டி.ஆர் 50 திரைப்படத்தை டிராப் செய்ய வாய்ப்பே இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அநேகமாக அடுத்த ஆண்டு அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது.