பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் வருத்தம் தெரிவித்து கண்ணீர்விட்டு  மன்னிப்பு கேட்டார். 

தென் ஆப்பிரிக்காவிலிருந்து தாய் நாடு திரும்பிய ஸ்மித், சிட்னி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது, "நான் மிகப் பெரிய தவறை இழைத்துவிட்டேன் என்பதை புரிந்துகொண்டுவிட்டேன். என்னுடைய தலைமைக்கு கிடைத்த தோல்வியாகவே இதைக் கருதுகிறேன். 

பந்தை சேதப்படுத்த முயன்ற செயலுக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நான் முழு பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். இதுபோன்ற தவறு இனி நிகழாமல் இருக்க நான் மற்ற வீரர்களுக்கு ஒரு பாடமாக இருப்பேன் என்று கருதுகிறேன். 

எனக்கான மரியாதையை நான் மீண்டும் மீட்டெடுப்பேன் என்று நம்புகிறேன். மிகச் சிறந்த விளையாட்டு கிரிக்கெட். அதுதான் எனது வாழ்க்கை. அதன் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தியதற்காக வருந்துகிறேன். இதுபோன்று இனி ஒருபோதும் நடக்காது. என்னை மன்னித்து விடுங்கள். நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை" என்று அவர் கூறினார்.