ஹாலிவுட் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த படங்களில் ஸ்டார் வார்ஸ் படத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு. ஜார்ஜ் லூகாஸ் இயக்கத்தில் 1977ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஸ்டார் வார்ஸ்'. இதில் டார்த் வேடார் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் டேவிட் ப்ரவுஸ் காலமானார் என்ற செய்தி ஸ்டார் வார்ஸ் ரசிகர்களையும், திரையுலகினரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மாதம் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் முதன் முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஷான் கானரி மரணமடைந்த இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சி தாக்கியுள்ளது. 

முதல் மூன்று 'ஸ்டார் வார்ஸ்' திரைப்படங்களிலும் நடித்திருந்த ப்ரவுஸுக்கு அதன் பிறகு அந்த அளவு புகழைத் தேடித் தரும் கதாபாத்திரங்கள் அமையவில்லை. 'ஃப்ரான்கன்ஸ்டைன்' என்கிற கதாபாத்திரத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். பின்பு ஸ்டான்ல் க்யூப்ரிக்கின் 'எ க்ளாக்வொர்க் ஆரஞ்ச்' திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஆனால், எதுவுமே ஸ்டார் வார்ஸுக்கு நிகராக இல்லை. 'தி செய்ண்ட்', 'ஸ்பேஸ் 1999', 'டாக்டர் வூ' உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்த பிரவுஸ் தனது இறுதிக் காலத்தை லண்டனில் கழித்து வந்தார்.

 

85 வயதான டேவிட் ப்ரவுஸ் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை லண்டனில் மரணமடைந்தார். இந்த செய்தி லட்சக்கணக்கான ரசிகர்களையும், ஹாலிவுட் திரையுலகையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.