சோழ, பாண்டிய வரலாறு மெய்சிலிர்க்க வைத்தது... தமிழ்நாட்டில் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்ட ராஜமவுலி நெகிழ்ச்சி
தமிழ்நாட்டில் சாலை மார்க்கமாக சுற்றுலா செல்ல வேண்டும் என்கிற தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாக இயக்குனர் ராஜமவுலி நெகிழ்ச்சி உடன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் நான் ஈ, பாகுபலி, மவீரா, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் மூலம் பான் இந்தியா இயக்குனராக உயர்ந்துவிட்டார். குறிப்பாக கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதை வென்று உலக சினிமா ரசிகர்களிடம் பாராட்டையும் பெற்றது. அடுத்ததாக ராஜமவுலி, மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகின்றார்.
இயக்குனர் ராஜமவுலி ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தாலும், இவருக்கு சினிமாவை கற்றுத்தந்தது தமிழ்நாடு தான். இதை பல்வேறு பேட்டிகளிலும் அவரே கூறி இருக்கிறார். இதனால் தமிழ் நாட்டின் மீது அவருக்கு எப்போது ஒரு தனி மதிப்பும் மரியாதையும் உண்டு. அவர் தமிழ்நாட்டை சாலை மார்க்கமாக சுற்றிப்பார்க்க வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசைப்பட்டாராம். அவரின் அந்த ஆசை தற்போது ஒருவழியாக நிறைவேறி உள்ளது.
இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயன் கைவிட்ட "சிங்கப்பாதை".. கையிலெடுக்கும் ஆர்.ஜே. பாலாஜி - தயாராகும் புதிய இயக்குனர்!
தமிழ்நாட்டில் ஒருவாரம் குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா சென்ற ராஜமவுலி, அதுகுறித்த கிளிம்ப்ஸ் வீடியோவை பதிவிட்டு, அந்த சுற்றுலா குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது : “தமிழ்நாட்டில் சாலை மார்க்கமாக பயணம் செய்ய நீண்ட நாட்களாக விரும்பினேன். கோயில்களுக்குச் செல்ல விரும்பிய என் மகளால் அது நிறைவேறியது, அவருக்கு நன்றி. கடந்த ஜூன் மாதம் கடைசி வாரத்தில் ஸ்ரீரங்கம், தாராசுரம், பிரகதீஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், கானாடுகாத்தான், தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தேன்.
அங்குள்ள நேர்த்தியான கட்டிடக்கலை, அற்புதமான பொறியியல் மற்றும் பாண்டியர்கள், சோழர்கள், நாயக்கர்கள் மற்றும் பல ஆட்சியாளர்களின் ஆழ்ந்த ஆன்மீக சிந்தனை உண்மையிலேயே என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
கும்பகோணத்தில் உள்ள மந்தர கூடமாக இருக்கட்டும், ராமேஸ்வரத்தில் உள்ள காக்கா ஹோட்டல், முருகன் மெஸ் ஆக இருக்கட்டும் எல்லா இடங்களிலும் உணவு மிகவும் அருமையாக இருந்தது. ஒரே வாரத்தில் 2-3 கிலோ எடை நிச்சயமாக அதிகரித்திருக்கும். 3 மாத கால வெளிநாட்டு பயணம் மற்றும் உணவுக்குப் பிறகு, இந்த தாய்நாட்டு சுற்றுப்பயணம் புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது” என பதிவிட்டுள்ளார் ராஜமவுலி.
இதையும் படியுங்கள்... பனையூர் இல்லத்தில் 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் விஜய் திடீர் மீட்டிங்... பின்னணி என்ன?