தமிழ் மற்றும் இந்தி திரையுலகை ஒரு காலத்தில் கட்டி ஆண்ட நடிகை ஸ்ரீதேவி, நேற்று முன் தினம் இரவு துபாயில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை இந்தியா கொண்டுவருவதற்கான பணிகள் நடந்துவருகின்றன.

துணைவன், நம்நாடு உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவி, 1976ம் ஆண்டில் இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் மூன்று முடிச்சு படத்தில் நாயகியாக அறிமுகமானார். தனது 13வது வயதில் நாயகியாக இந்த படத்தில அறிமுகமான ஸ்ரீதேவி, ரஜினி மற்றும் கமலுக்கு சவால் விடும் வகையில் நடித்திருப்பார்.

அதன்பிறகு 16 வயதினிலே, மூன்றாம் பிறை, ஜானி என பல தமிழ்ப்படங்களில் நடித்து முத்திரை பதித்தார். அதன்பிறகு இந்தி திரையுலகில் கால் பதித்து அங்கும் ஒரு கலக்கு கலக்கினார்.

16 வயதினிலே படத்தில் மயிலாகவும் மூன்றாம் பிறை படத்தில் மனநலம் குன்றிய பாக்யலட்சுமியாகவும் ஜானி படத்தில் பாடகி அர்ச்சனாவாகவும் அனைவரின் மனதையும் கட்டிப்போட்டார் ஸ்ரீதேவி.

இப்படியாக தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் சிறப்பாக நடித்திருந்தாலும், அவர் நடித்த படத்தில் அவருக்கு மிகவும் பிடித்த மனதுக்கு நெருக்கமான படம் என்றால் அது “ஜானி”.

மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடித்த படம் ஜானி. இந்த படத்தில் அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் பாடகியாக படம் முழுவதும் சிறப்பாக நடித்திருப்பார் ஸ்ரீதேவி. என் வானிலே ஓர் வெண்ணிலா, காற்றில் எந்தன் கீதம், ஓர் இனிய மனது இசையை சுமந்து செல்லும் ஆகிய வெற்றி பாடல்களுக்கு உயிர் கொடுத்தார் ஸ்ரீதேவி. 

இந்த படம் ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடிக்குமாம். இதை பலமுறை அவரே பல பேட்டிகளிலும் மேடைகளிலும் குறிப்பிட்டுள்ளார். அந்த படத்தில்தான் அவருடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாகவும் கூட குறிப்பிட்டிருக்கிறார் ஸ்ரீதேவி.