நடிகை ஸ்ரீதேவி குடும்ப நண்பர் திருமணத்திற்காக, துபாய் சென்றிருந்த போது கடந்த வாரம் 24ஆம் தேதி ஓட்டல் அறையில் திடீர் என உயிர் இழந்தார் என கூறப்பட்டது. 

முதலில் மாரடைப்புக் காரணமாக இவர் உயிர் இழந்ததாகக் கூறப்பட்டாலும் பின் தண்ணீர் தொட்டியில் மூழ்கி மரணமடைந்ததாக தகவல் வெளியானது. இதனால் இவருடைய மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பல தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் குறித்து அவரது கணவர், போனி கபூர் மனம் திறந்து பேசியுள்ளார். பிரபல சினிமா விமர்சகர் கோமல் நந்தாவிடம் போனி கபூர் பேசியதை, நந்தா ஒரு கட்டுரையாக வெளியிட்டுள்ளார். 

மகளுக்காக தங்கிய ஸ்ரீதேவி:

அதில் போனி கபூர் கூறியுள்ளதாவது... மகள் ஜான்விக்காக ஷாப்பிங் செய்ய ஸ்ரீதேவி திட்டமிட்டிருந்தார். அதனால் திருமண நிகழ்ச்சி முடிந்த பிறகு, 2 நாட்கள் துபாயிலேயே தங்க ஸ்ரீதேவி முடிவு செய்தார். பிப்ரவரி 22ஆம் தேதி லக்னோவில் மீட்டிங் ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக நான் இந்தியா வந்து விட்டேன். 

அன்றைய தினம் ஸ்ரீதேவி தனது தோழியுடன் பேசி பொழுதை கழித்து விட்டு, ஓட்டல் அறையில் ஓய்வு எடுத்துள்ளார்.

என்ன நடந்தது?

பிப்ரவரி 24ம் தேதி காலை நான் ஸ்ரீதேவியுடன் பேசினேன். நான் உங்களை மிகவும் மிஸ் பண்றேன் என்றார். அப்போதும் அன்று மாலை நான் துபாய்க்கு வருவதை அவரிடம் சொல்லவில்லை. கடந்த 24 வருடங்களில் ஸ்ரீதேவியை இல்லாமல் 2 முறை மட்டும் தான் தனியாக வெளிநாடு சென்றுள்ளேன். ஒன்று நியூஜெர்சி பயணம், மற்றொன்று வான்கோவர் சென்றது. 

3:30 மணிக்கு துபாய் செல்லும் விமானத்தில் சென்றேன். துபாய் நேரப்படி மாலை 6.20க்கு ஓட்டல் அறைக்கு சென்றேன். ஸ்ரீதேவிக்கு சர்ப்பரைஸ் கொடுப்பதற்காக அவரிடம் சொல்லாமல் சென்றேன் என்னிடம் இருந்த டூப்ளிகேட் சாவியை வைத்து கதவை திறந்து ஸ்ரீதேவியின் அறைக்கு சென்றேன். ஆனால், நான் துபாய் வருவேன் என தெரியும் என்று ஸ்ரீதேவி என்னிடம் கூறினார்.

என்னைக் கட்டி அணைத்து முதம்மிட்ட ஸ்ரீதேவி, அரைமணிநேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். பிறகு ஷாப்பிங் போகலாம், தற்போது இரவு உணவிற்காக செல்லலாம் என கூறினேன். அதற்கு சம்மதம் தெரிவித்து அவரும் குளித்து வருவதாக கூறி பாத் ரூமிற்கு சென்றார். நான் அறையில் டிவி பார்த்துக்கொண்டிருந்தேன்.

15 - 20 நிமிடங்களுக்கு மேல் ஆகியும் அவர் வரவில்லை. அன்று சனிக்கிழமை என்பதால் இரவு 8 மணிக்கு மேல் ஓட்டலில் கூட்டம் அதிகமாக என கூறி ஸ்ரீதேவியை கூப்பிட்டேன். நான் சத்தமாக கூப்பிட்டும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. வழக்கத்திற்கு மாறாக இருப்பதால், பாத்ரூம் கதவை தட்டினேன்.

அப்போதும் தான் பார்த்தேன் கதவு உள்புறம் தாளிடாமல் இருந்தது. பதற்றமும், பயமும் அடைந்து ஓடி சென்று பார்த்த போது, ஸ்ரீதேவியின் உடல் முழுவதும் குளியல் தொட்டிக்குள் மூழ்கி இருந்தது. அசைவற்று அவர் இருந்ததால் எனக்கு பயம் அதிகமானது. அவரை எழுப்ப முயன்றேன் ஆனால் அவர் எழவே இல்லை என்று கண்ணீரோடு கூறியதை நந்தா இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.