படவாய்ப்பு கொடுப்பதாக தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டதாக பல தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்கள் மீது அதிரடியாக குற்ற சாட்டுகளை முன்வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி.

இவர் தற்போது சென்னை வளசரவாக்கம் பகுதியில் வீடு எடுத்து தங்கி தமிழ் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் இவர் இன்று காலை சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் திடுக்கிடும் புகார் ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து அவர் கொடுத்த புகாரில்... "வளசரவாக்கம் வீட்டில் தங்கி இருந்த தன்னை 2 மர்மநபர்கள் தாக்கியதாகவும், அவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்ரீரெட்டி தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்".  

ஸ்ரீரெட்டியின் இந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட வளசரவாக்கம் காவல் துறையினர் இந்த மனு மீது விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதைத்தொடர்ந்து ஸ்ரீ ரெட்டி அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் இதில், "என்னுடைய இலக்கு என்ன என்பதை நான் மறக்க மாட்டேன், தொடர்ந்து பொள்ளாச்சி சம்பவத்திற்காக சண்டை போடுவேன் காரணம் நான் இங்கு இருக்கிறேன். எனக்கு பல எதிரிகள் இருக்கிறார்கள் நடு இரவில் என் வீட்டை தாக்கியுள்ளனர். அவர்கள் என்னை கொலை கூட செய்யலாம். ஆனால் கடவுளின் ஆசியில் தற்போது நலமாக இருக்கிறேன். தனக்காக பிராத்தனை செய்த ஓவ்வொரு பிராத்தனைக்கு, தமிழ்நாடு போலீசாருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.