Sri Devi expired in dubai today funeral in Mumbai
துபாயில் மரணமடைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கு இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டுவர தொழிலதிபர் அனில் அம்பானியின் தனி விமானம் துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளது.
தமிழ் மொழியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். கமல், ரஜினி, சிரஞ்சீவி, ரிஷிகபூர் மற்றும் ராஜ்கபூர் என இந்திய சினிமாவில் பல உச்சநட்சத்திரங்களுடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர்.

துபாயில் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் உடல் நேற்றே சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தடயவியல் துறையின் சான்றிதழ் உடனடியாக கிடைக்காததால், உடலைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தேவியின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீதேவியின் இறப்பு சான்றிதழ் மருத்துவமனையில் அளிக்கப்படும் என்றும், உடலைப் பெற அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

.இந்நிலையில் துபாயில் இருந்து இந்தியா கொண்டு வரப்படும் தேவியின் உடல் மும்பை கிரீன் ஏக்கர்ஸ் இல்லத்தில் இன்று பொது மக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. தொடர்ந்து இறுதி சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துபாயில் இருந்து தேவியின் உடலைக் கொண்டு வர அனில் அம்பானியின் தனி விமானம் துபாய் புறப்பட்டுச் சென்றது.
ஸ்ரீதேவியின் மறைவையடுத்து அவரது மும்பை இல்லம் முன்பு ஏராளமான ரசிகர்கள் சோகத்துடன் குழுமியுள்ளனர்
