துபாயில் இருந்து மும்பை கொண்டு வரப்பட்ட நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது. தாயின் உடலைப்பார்த்து அவரது மகள்கள் ஜான்வி மற்றும் குஷி ஆகியோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண் கலங்கச் செய்தது.

நடிகை ஸ்ரீதேவி உறவினரின் திருமணத்துக்காக துபாய் சென்றபோது, குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். முதலில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்று சொல்லப்பட்ட நிலையில், பின்னர் பிரேத பரிசோதனையின்போது பாத்ரூமில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததது தெரியவந்தது.

இதையடுத்து தீவிர விசாரணைக்குப் பின், அவரது மரணத்தில் குற்ற நோக்கம் எதுவுமில்லை என துபாய் வழக்கறிஞர் அறிவித்தார், இதனையடுத்து ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு கணவர் போனி கபூரிட்ம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான தனி விமானத்தில் ஸ்ரீதேவி உடல் ஏற்றப்பட்டது. பிறகு மாலை 5.30 மணியளவில் விமானத்தின் மூலம் மும்பைக்கு புறப்பட்டது.அந்த விமானத்தில் போனிகபூர் உள்ளிட்ட உறவினர்கள் பயணம் செய்தனர்.

நடிகை ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் நேற்று இரவு மும்பை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து உடல் ஆம்புலன்ஸ் மூலம் அந்தேரி மேற்கு லோகண்ட்வாலா கிரீன் ஏக்கர்ஸ் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது.

உடலை பார்த்த ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்களை உறவினர்கள் தேற்றினர். ஸ்ரீதேவியின் உடலுக்கு குடும்பத்தினர் சடங்குகளை செய்தனர்.

நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று காலை அந்த பகுதியில் உள்ள செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அங்கு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

அங்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் இறுதி ஊர்வலம் நடக்கிறது. மும்பை வில்லேபார்லே மேற்கு பவன்ஹன்ஸ் அருகே உள்ள மயானத்தில் அவரது உடல் பிற்பகல் 3.30 மணி அளவில் தகனம் செய்யப்படுகிறது.