ஐக்கிய அரபு அமீரகத்தின்  சட்ட நடைமுறைகளை முடித்து நடிகை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வர 2 மூன்று  நாட்கள் கூட ஆகலாம் எனஅந்நாட்டுக்கான இந்திய தூதர் நவ்தீப் சூரி தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி  தனது  கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்தினருடன் துபாய் சென்று இருந்தார். திருமண விழாவில் ஸ்ரீதேவி உற்சாகத்துடன் கலந்து கொண்டார். கணவர் போனிகபூர், இளைய மகள் குஷிகபூர் இருவரும் அன்று மதியமே மும்பை திரும்பிவிட்டனர்.

ஸ்ரீதேவி மட்டும் துபாயில் தான் தங்கியிருந்த ‘ஜூமெய்ரா எமிரேட்ஸ் டவர்ஸ்’ நட்சத்திர ஓட்டலுக்கு திரும்பினார். இந்த நிலையில் கணவர் போனி கபூர் அன்று மாலை மீண்டும் துபாய்க்கு வந்தார். இதைத் தொடர்ந்து இருவரும் விருந்துக்கு செல்ல தயாராயினர்.

அப்போது குளியலறைக்கு சென்ற ஸ்ரீதேவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் நடிகை ஸ்ரீதேவி குளியல் அறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கியதால் சுவாசம் தடை பட்டு  உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் ஸ்ரீதேவி  மது அருந்தி இருந்ததற்கான சான்றுகள் அவரது ரத்த மாதிரிகளில் இருந்து பெறப்பட்டுள்ளது. அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. மேலும் அவரது மரணத்தில் குற்ற நோக்கம் எதுவும் இல்லை. எனவே இந்த மரணம் தண்ணீரில் மூழ்கியதால் நடந்த விபத்து என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த 2 நாட்களாக ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டுவரப்படும் என்று நினைதிருந்த நிலையில், சட்டநடைமுறைகள் முடிந்து உடல் கொண்டு வர இன்னும் இரண்டு, மூன்று நாட்கள் கூட ஆகலாம் என தெரிய வருகிறது.

இந்த தகவலை ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்தியத் தூதர் நவ்தீப் சூரி தனது ட்விட்டர்  பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.  ஸ்ரீதேவியின் மறைவு தொடர்பான செய்தியில் ஊடகங்கள் காட்டும் ஆர்வத்தை புரிந்துகொள்ளமுடிவதாக  அவர் தெரிவித்துள்ளார்.

முடிந்தவரை விரைவில் உடலை அனுப்புவதற்கு துபாய் அதிகாரிகளுடன் தான் முயற்சி செய்து வருவதாகவும், இதேபோன்ற மற்ற நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது உடலை மும்பைக்கு அனுப்புவதற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீதேவி குடும்பத்தினருடனும் அவருடைய நலம் விரும்பிகளுடனும் தான் எப்போதும் தொடர்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆக ஸ்ரீதேவியின் ரசிகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்றும் 3 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.