பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கடந்த மாதம் 14ம் தேதி முதலே கவலைக்கிடமானது.  இதையடுத்து  எஸ்.பி.பி. நலம் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென ஆகஸ்ட் 20 ஆம் திரையுலகினர், இசைப்பிரியர்கள், ரசிகர்கள், சாமானிய மக்கள் என லட்சக்கணக்கானோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

அதன் பலனாக படிப்படியாக எஸ்.பி.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை முன்னேற்றம் அடைய ஆரம்பித்தது. மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சையால் மயக்கநிலையில் இருந்து முற்றிலும் சீரான நிலைக்கு வந்தார். எஸ்.பி.பி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் இன்று வரை அவருடைய உடல் நிலை குறித்த தகவல்களை அவருடைய மகன் எஸ்.பி.பி.சரண்,  தினமும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். எஸ்.பி.பி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பல துரதிஷ்டவசமான வதந்திகள் பரப்பப்பட்டன. அதை தடுக்கவே சரண் தினமும் அப்டேட்களை வெளியிட்டு வந்தார். 

இந்நிலையில் மயக்க நிலையில் இருந்து பூரணமாக மீண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்,  மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் எஸ்.பி.பி. உடல்நிலையில் தற்போது திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் எஸ்.பி.பி. உடல் நலம் குறித்து சிறப்பு மருத்துவ குழு கண்காணித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் பிராத்தனையால் கொரானாவில் இருந்து மீண்டு, உடல் நலம் தேறி வந்த எஸ்.பி.பி விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவருடைய உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

எஸ்.பி.பி எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.