தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களில் தமிழக அரசின் ஆதரவு யாருக்கு இருக்கு எனக் கேட்டால், யோசிக்காமல் சொல்லலாம் அது தல அஜித்துக்கு என்று, ஆதார் யார் வம்பு தும்புக்கும் போகமாட்டார், பட விளம்பரத்திற்காக அரசியல் வாதிகளை வம்புக்கிழுக்கமாட்டார். அப்படிப்பட்ட நடிகரை ஏன் எதிர்க்கப்போகிறார்கள் அரசியல்வாதிகள்? அது அப்பட்டமாக இப்போது வெளிப்பட்டிருக்கிறது.

பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும், பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களில் விஸ்வாசம் மட்டும் தாறுமாறாக ரேட்டிங் எகிறிக்கொண்டிருக்கிறது. சென்னை காசி டாக்கீஸ், கோயம்பேடு ரோகிணி திரையரங்குகளில் அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வாசம் படம் திரையிடுவது உறுதியாகியிருக்கிறது. அதுமட்டுமல்ல, அம்பத்தூர் ராக்கி தியேட்டரில் உள்ள நான்கு தியேட்டரிலும் அதிகாலை காட்சி விஸ்வாசம் தான்.  அதற்கான டிக்கட்டுகள் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், பேட்ட காலை 8 மணிக்குப் பின்தான் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாகக் சொல்கிறார்கள்.

ஏன் இந்தப் பாரபட்சம்? அதிகாலை 1.30க்குப் படம் திரையிடுவது தேவையற்ற சர்ச்சைகள் வரும், அரசுக்கு வரி இழப்பு  ஏற்படும் என்றாலும் “அஜித், அம்மாவோட (ஜெயலலிதா) ஆளு. அதனால், விஸ்வாசம் படத்தை வெளியிடும் தியேட்டர்களை கண்டுகொள்ள வேண்டாம்  என தமிழக அரசு தரப்பில் அதிகாரபூர்வமற்ற  கட்டளையிட்டதாக சொல்லப்படுகிறது.

பொதுவாக ஜனவரி10 அன்று ரிலீஸ் ஆகும் படங்களுக்கு ஐந்து காட்சிகள் திரையிடத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு என்ன உத்தரவு பிறப்பித்தாலும் அதைக் கடைப்பிடிப்பது இல்லை என்பதை அடிப்படை கொள்கையாக தியேட்டர் உரிமையாளர்கள் கடைப்பிடித்து வருகின்றனர் என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.

முன்பெல்லாம் சிறப்புக் காட்சி, கூடுதல் காட்சி என்று இருந்ததைக் காலைக்காட்சியாக (6 மணி) மாற்றியது சென்னை நகரில் இருக்கும் திரையரங்குகள்தான். புதிய படங்களை இயல்பாகத் திரையிடுவதில் இருந்து மாறி, குறுகிய நாட்களுக்குள் அதிக வசூல் செய்யும் போக்கு திரையரங்குகள் மத்தியில் இருந்தது, தற்போது முதல்முறையாக விஸ்வாசம் படம் நள்ளிரவு 1.30 மணிக்குத் திரையிடுவது வரை வந்துள்ளது.  

 

2006 ல் திமுக ஆச்சிக்கு வந்ததும், கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ், உதயநிதியின் ரெட் ஜெயண்ட், துரை தயாநிதியின் க்ளவுட் நயன் மூவிஸ் என தமிழ் சினிமாவில் ஆதிக்கம் இருந்து வந்தது, அப்போது திமுக ஆட்சியின் கடைசி வருடத்தில் அழகிரி மகன் துரை தயாநிதி தயாரிப்பில் அஜித் மங்காத்தா படத்தில் நடித்தார். படம் எடுத்து முடிப்பதற்குள் அதிமுக ஆட்சி வந்ததும், கருணாநிதி குடும்ப தயாரிப்பு நிறுவனங்கள் அடக்கி வாசிக்க தொடங்கியது. அப்போது மங்காத்தா படத்தை வெளியிட திணறினார் தயாநிதி அழகிரி.

ஆனால் அஜித்தோ பயப்படாமல் வெளியிடுங்கள் எந்த பிரச்சனையும் வராது என தைரியமாக சொன்னார். காரணம் தன்னுடைய படத்தை ஜெயலலிதா  எதுவும் செய்யமாட்டார் என்ற நம்பிக்கை அஜித்துக்கு இருந்தது. ஏனென்றால் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளையாக இருந்தார் அஜித். அந்த பாசம் தான், பல்கேரியாவில் இருந்து விமானத்தின் மூலம் சென்னைக்கு வந்ததும் ஏர்போர்ட்டிலிருந்து நேராக ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த ஓடோடி வந்தபோதே தெரிந்தது. அப்போது மட்டுமல்ல எப்போதுமே அஜித் செல்லப்பிள்ளையாக இருப்பதால் அதிமுக தரப்பில் எப்போதுமே ஆதரவாகவே இருக்கிறார்கள்.