Special Article about Rajinikanth

ரஜினியின் பேரன்கள் லிங்கா, யாத்ரா, கிருஷ்ணாவெல்லாம் டாம் க்ரூஸ், சோட்டா பீமோட ரசிகர்கனுங்கோ. ஆனா எங்க பக்கத்துவீட்டு பேரக்குட்டிகளின் தாத்தா இப்பவும் ரஜினியோட தாறுமாறான வெறி ரசிகன்.

டை அட்ச்சு அட்ச்சே டெட் ஆகி போன முந்நூற்று முப்பத்தாறு முடிகளையும் கோதிக்கிணு ‘எனக்கும் என் தலைவனுக்கும் ஒரே வாரம்தான் வித்தியாசம். அவரு டிசம்பரு 12 நான் டிசம்பரு 19. அந்த வகையில அவரு என்க்கு அண்ணாத்தடா!.” என்பார். சரி தொலையுது, ரசனை வயசறியாது!-ன்னு மன்னிச்சு வுட்றலாம்.

ஆனா கடந்த 22 வருஷமா ‘அடுத்த முதல்வர் என் தலைவன் தான்டா”ன்னு அவர் நம்பிகினே இருக்றதை சத்தியமா ஏத்துக்க முடியல! ...தா அந்தாள மனுஷ சாதியில சேத்துக்க முடியலை. 

தெனமும் நைட்டு 8 மணிக்கு ஜாம்பஜார் சிக்னலாண்ட டாண்ணு ஆஜராகிடுவாரு. வூட்டுக்கு ஒண்ணாதான் போவோம். ரெண்டு நாளா ஆள காணோம். வூட்டாண்ட கேட்டதுக்கு ‘பெர்சு கோயாமுத்தூர் போயிக்கீதுபா”ன்னு சொன்னாங்கோ. மன்சு கேக்காம போன் போட்டேன்! ‘என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா!”ன்னு அவுங்க தலைவனுக்காக எஸ்.பி.பி. பாடிகினு இருந்தாரு காலர் டியூனுல. எனக்கு செம காண்டு! ‘தங்க காசு கொடுத்தவனுக்கு நீங்க என்னா கொடுத்தீங்கோ?”ன்னு நென்ச்சுகினேன்.

நாலு தடவ கூப்ட்டும் பெர்சு போன எடுக்கல, நானும் வுடல. அஞ்சாவட்டி பெர்சு டக்குன்னு போன எடுத்து ‘ன்னாபா, மிக்கியமான மீட்டிங்ல இருக்கொச்சொல்லோ ச்சும்மா நொய் நொய்ன்னு போன் பண்ணிக்கிற”ன்னு கேட்டுச்சு. அப்டி இன்னா மிக்கியமான மீட்டிங்?னு கேட்டேன். 

’’கோயாமுத்தூர்ல தலீவரு போட்டோவ போட்டு செம்ம்ம்மயா போஸ்டரு ஒட்டியிருக்காங்கோ. ’மக்கள் வாழவோணும்னா நீங்கள் ஆள வோணும்! ஊழல ஒழிச்சிட, சிறு குறு தொழிலுங்கல காத்திட வா!_ன்னு தலீவருக்கு தாறுமாறா இன்விடேஷன வுட்டிருக்காங்கோ. பார்த்தாலே மெர்சலாகீதுபா! இங்க ரசிகனுங்க மத்தியில செம்ம ரெஸ்பான்ஸு. அதான் இத்தே மாதிரி நம்ம சிட்டியாண்டயும் போஸ்டரடிக்க டிஸைன் ரெடி பண்ணிக்கலாம், மேற்படி விஷயத்தையும் பேசிக்கலாம்னு வந்தேன்.” அப்படின்னாரு. 

வந்த கோவத்த அட்க்கிக்கினு ‘பொண்ணு கல்யாணத்துக்கு மண்டபத்துக்கு ரசிகனுங்கள கூப்பிட முடியலை அதனால ஒரு நாள் வூட்டாண்ட அழச்சு பிரியாணி போடறேன்னு உங்க தலீவரு சொன்னாரே என்னாச்சு நைனா! பிரியாணி இன்னுமா வேகல? இந்த மாசம் மொதா வாரம் ரசிகனுங்கல கூப்ட்டு போட்டோ எடுக்குறேன்னு சொல்லிட்டு அப்பாலிக்கா வாட்சாப்புல பேசி கேன்சல் வுட்டாரே! இப்பவும் நீங்க திருந்தல?

தம்மாத்துண்டு மேட்டருக்கே செட் ஆவாத மனுஷன், எப்படிய்யா சி.எம்.விஷயத்துக்கெல்லாம் சரிப்பட்டு வருவாரு?” அப்படின்னு பெர்சுட்ட கேட்டேன். ‘கம்முன்னு போன கட் பண்ணிட்டு, என் அக்கவுண்டுல ஐநூறு ரூவா போட்டு வுடு, டை அடிக்கணும், நாஸ்தா சாப்பிடணும்” அப்படின்னு சொல்லி அவரே கட் பண்ணிட்டாரு. 

இம்புட்டு சொன்னேனே, அந்தாளு பேரு இன்னான்னு கேக்குலீயே!...போனவாரம் படையப்பா வீரமணி, இந்த வாரம் 2.ஜீரோ வீரமணி அடுத்தா வாரம் லிங்கா வீரமணிம்பாப்ல! 
சில பேருக்கு ஏமாறுவது சொகம்! ஃப்ரீயா வுடு நைனா!