ஒரு சிறிய கருத்து வேறுபாட்டுக்குப்பின இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்கிற அற்புதமான நண்பர்கள் இணைந்திருக்கும் தருணத்தைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு இணையுலக சனியன்கள் வழக்கம்போல் ‘96’ படத்தில் தனது பாடல்கள் பயன்படுத்தப்பட்டதற்கு ராஜா தெரிவித்த கருத்தை கண்,காது,மூக்கு வைத்து நச்சுச்செய்தி ஒன்றைப் பரப்பிவருகிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் பதில் இந்த ஒற்றை முகநூல் பதிவுதான்,...ஒரு நண்பர் எழுதி இருக்கிறார் இளையராஜா தன் வாயால் ஒழிந்து போனார், இன்னும் போவார் என,...80, 90 களில் வாரா வாரம் ஒரு வெற்றி படத்தை கொடுத்தவர். இன்றளவும் இவரின் சாதனையின் அருகில் செல்ல கூட இங்கு யாருமில்லை. இனிமேல் பிறந்தால் தான் உண்டு. முதல் முறையாக இசை அமைப்பாளர் மாஸ் ஹீரோவான காலம். இசை 'இளையராஜா' என்று திரையில் தோன்றியவுடன் விசில் சத்தம் பறக்கும். எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினி, கமலுக்கு இணையாக கிடைத்த அங்கீகாரம் அது.

1000 படங்களுக்கு இசை என்பது யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது. அதுவும் அதில் 80 சதவீதம் வெற்றி படங்கள். பல நூறு படங்கள் இவரின் இசைக்காகவே வெற்றி கண்டது. பெரிய ஹீரோ,புது முக நடிகர் , புது முக இயக்குநர், பெரிய இயக்குநர் என எல்லாரும் தவம் இருந்து பாடல் வாங்கினார்கள். ஆனால் இவர் அனைவரையும் சமமாகவே நடத்தினார். இசையில் ,பாடல்களில் அவர் என்றுமே வேறுபாடு காட்டியது இல்லை.

அவரை நன்றாகப் பயன்படுத்தி லாபம் அடைந்த இரண்டு பெரிய இயக்குநர்கள் இவரை ஒழிக்க வேண்டும் என்று செயலில் இறங்கினார்கள். அதில் ஒருவர் தன் கடைசி காலத்தில் படங்களே இல்லாமல் போனார். அவர்களை காலம் வேகமாக தள்ளி விட்டது, ஆனால் ராஜா காலத்திற்கும் நிலைத்து நிற்கிறார். இளையராஜாவையும் அவருடைய பாடல்களையும் எவரும் எந்த காலத்திலும் அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது, அது இளையராஜாவே ஆயினும் முடியாது.

இளையராஜா என்ற பெயர் ஒரு ஈடு இணையில்லா சர்வ இசையின் சகாப்தம். அவர் உபயோகித்த வார்த்தையின் காட்டம் அதிகமெனில் அதற்கு கண்டனம் தெரிவிக்கலாமே ஒழிய, சர்வ சங்கீதத்தின் ஆழமரத்தின் மீது இது தான் சாக்கு என 'மான்' வகையறாகள் கல் எறிவது சிறுபிள்ளை முட்டாள்தனம்.
-ஜோஸப் ஆண்டோ...