பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 14ம் தேதி முதலே இவருடைய உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான தகவல் ஒட்டு மொத்த திரையுலகை சேர்ந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.  

இதையடுத்து  எஸ்.பி.பி. நலம் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என, ஆகஸ்ட் 20 ஆம் தேதி திரையுலகினர், இசைப்பிரியர்கள், ரசிகர்கள், சாமானிய மக்கள் என லட்சக்கணக்கானோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதே போல் நேற்றும் சில ரசிகர்கள்  6 மணி முதல் 6 :05 மணிவரை எஸ்.பி.பிக்காக கூட்டு பிராத்தனையில் ஈடுபட்டனர்.

ரசிகர்களின், பிராத்தனைக்கு கிடைத்த பலனாக... நாளுக்கு நாள் எஸ்.பி.பி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வருகிறது. அதே போல், எஸ்.பி.பியின் மகன் சரணும் அணைத்து மொழி ரசிகர்களும் புரியும் வகையில் ஆங்கிலத்தில், தன்னுடைய தந்தை உடல் நிலை குறித்த அப்டேட் வழங்கி வருகிறார்.

அந்த வகையில் இன்று மருத்துவமனை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது.... எஸ்.பி.பி தற்போது சுய நினைவில் உள்ளதாகவும். அவருக்கு தொடர்ந்து, எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் முன்பை விட, எஸ்.பி.பி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு பிசியோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையின் இந்த தகவல், எஸ்.பி.பி ரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளது. நேற்றைய தினம், எஸ்.பி.பி.மகன் சரண், இன்னும் ஒரு வாரத்தில் எஸ்.பி.பி பூரண குணம் அடைவார் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.