பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 14ம் தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைகிடமாக இருப்பதாகவும், அவர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டு செயற்கை சுவசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் எஸ்.பி.பி. நல்ல உடல் நலத்துடன் திரும்ப வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர். 

எஸ்.பி.பி நல்ல உடல் நலத்துடன் மீண்டு வர வேண்டுமென இயக்குநர் பாரதிராஜா கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் (6 மணிக்கு)  தங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பி பாடலை ஒலிக்கவிட்டு அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்தும், தங்களது ரசிகர்கள் இந்த கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்க வலியுறுத்தியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளையராஜா உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் அப்பாவின் உடல் நிலை குறித்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அப்பாவின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றும், ஆனால் ரசிகர்களின் பிரார்த்தனை நிச்சயம் அவரை மீட்டுக்கொண்டு வரும் என்பதை உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் திரையுலகினர் இன்று மாலை எனது அப்பாவிற்காக ஏற்பாடு செய்துள்ள கூட்டு பிரார்த்தனைக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நன்றி சொல்ல வார்த்தை இல்லை, தலைவணங்குகிறோம். இந்த பிரார்த்தனைகள் எல்லாம் வீண் போகாது. கடவுளுக்கும் மனசாட்சி இருக்கு அவர் கண்டிப்பா அப்பாவை நமக்கு மீட்டு தந்துவிடுவார். அனைவருக்கும் நன்றி என கண்கலங்கிய படி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.