பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். தன்னை மருத்துவர்கள் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள கூறியதாகவும், ஆனால் குடும்பத்தினர் நலன் கருதி மருத்துவமனைக்கு வந்ததாகவும் கூறினார். தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும்,  மருத்துவர்கள் தன்னை ஓய்வில் இருக்க சொல்லியுள்ளதால் யாரும் எனக்கு போன் செய்ய வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். 

நேற்று வரை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு வந்த அறிக்கையில், எஸ்பிபி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழு அவரை கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இன்று வெளியான அறிக்கையில், “எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து கடந்த 5ம் தேதியில் இருந்து எம்.ஜி.எம். மருத்துவமனையில் இருக்கிறார். நேற்று இரவு அவரின் உடல்நலம் திடீர் என்று மோசமடைந்தது. மருத்துவ நிபுணர்களின் அறிவுரையின்படி அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது” என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. 

கொரோனாவுடன் தீவிரமாக போராடி வரும் எஸ்.பி.பி. நல்ல படியாக வீடு திரும்ப வேண்டுமென ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், ராதிகா, தனுஷ், அனிருத், சின்மயி, பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.  இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ரசிகர்களும், திரைத்துறையினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.