திரையுலகைப் பொறுத்தவரை தீயாய் பரவி வரும் கொரோனா வைரஸுக்கு அமிதாப் பச்சன் உள்ளிட்ட மிகவும் பிரபலமானவர்களின் குடும்பங்கள் கூடதப்பவில்லை. ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஆராத்யா என ஒட்டுமொத்த குடும்பத்தையும் தொற்று பாடாய் படுத்திவிட்டது. ஆக்‌ஷன் கிங் மகள் ஐஸ்வர்யா, விஷால் மற்றும் அவரது தந்தை, பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி மற்றும் குடும்பத்தினர் என நாளுக்கு நாள் தொற்றுக்கு ஆள்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்த வரிசையில் தற்போது பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாலசுப்ரமணியம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவர்கள் பூரண நலமடைந்து வீடு திரும்ப வேண்டுமென வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எஸ்.பி.பி, தனக்கு லேசான காய்ச்சல், சளி தொந்தரவு இருந்ததால் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதில் தனக்கு மிகவும் குறைவான அளவிற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மருத்துவர்களின் அறிவுரையின் படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொண்டிருக்கலாம், ஆனால் வீட்டில் இருப்பவர்கள் கவலை அடைவார்கள். அதனால் தான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நான் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன். என்னைப் பற்றி எண்ணிரும் அஞ்ச வேண்டாம்.

மேலும் தனது உடல் நிலை குறித்து விசாரிப்பதற்காக பல போன் கால்கள் வருகின்றன. என்னால் அனைவரிடமும் பேச முடியவில்லை, மருத்துவர்கள் என்னை ஓய்வில் இருக்க சொல்லியுள்ளதால் யாரும் எனக்கு போன் செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.