கொரோனா அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் சென்டரில் அனுமதிக்கப்பட்டார் எஸ்.பி.பி. அங்கு 51 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பியின் உடல் நிலை தொடக்கத்தில் மோசமடைந்தாலும், கடந்த சில நாட்களாக நல்ல நிலையில் முன்னேறி வந்தது.கடந்த 4ம் தேதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என வந்தது. இதனால் எஸ்.பி.பி. மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடுவார் என அனைவரும் காத்திருந்தனர்.  கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் உயிர்காக்கும் கருவிகளின் அதிகபட்ச உதவி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சிகிச்சைபெற்றுவரும் எம்.ஜி.எம். மருத்துவமனை தெரிவித்தது.


ஆனால் இன்று மதியம் சரியாக 1.04 மணிக்கு எஸ்.பி.பி. நம்மை விட்டு பிரிந்தார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதிகபட்ச உயிர் காக்கும் கருவிகள் மற்றும் மருத்துவர்கள் உடன் முயன்ற போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

தற்போது எஸ்.பி.பி-யின் உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
இந்நிலையில் நாளை  சென்னையை ஒட்டிய செங்குன்றத்திலிருந்து 14 கி.மீ தொலைவில் தாமரைப்பாக்கத்திலுள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.