உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் யாஷின் ' கேஜிஎஃப்: அத்தியாயம் 2 ' மிகப்பெரிய வெற்றியைப் பற்றி கருத்து தெரிவித்த கிச்சா சுதீப் இந்தி இனி தேசிய மொழியல்ல என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கன்னட திரைப்படமான கேஜிஎஃப்: அத்தியாயம் 2 பான் இந்திய படமாக வெளியாகி புழுதி கிளப்பி வருகிறது. இந்த படம் முதல் வாரத்தில் மட்டும் ரூ.720.31 கோடி வசூல் செய்து நாடு முழுவதும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன் இரண்டாவது வாரத்தில், வெள்ளியன்று ரூ.776.58 கோடியை ஈட்டி, இரண்டாவது வார இறுதியில் ரூ.800 கோடியைத் தாண்டியது, அதன் மொத்த வசூல் ரூ.880 கோடி.
இந்நிலையில் இந்தி உட்பட பன்மொழிகளில் கலக்கி வரும் கன்னட படம் குறித்து I am R பட விழாவில் பேசிய பிரபல நடிகர் கிச்சா சுதீப், 'முக்கிய பாலிவுட் திரைப்படங்களில் இல்லாத சக்தி மற்றும் தரம் மற்ற பிராந்திய படங்களின் இருப்பது குறித்து பேசியுள்ளார். அதோடு 'இந்தி இனி ஒரு தேசிய மொழி அல்ல என்று திடுக்கிடும் வகையிலும் கூறியுள்ளார்..

மேலும் அவ்விழாவில் பேசிய சுதீப் , "கன்னடத்தில் பான் இந்தியா படம் எடுக்கப்பட்டதாக யாரோ சொன்னார்கள். நான் ஒரு சிறிய திருத்தம் செய்ய விரும்புகிறேன். இந்தி இனி தேசிய மொழி அல்ல. பாலிவுட்நாயகர்கள் இன்று பான்-இந்தியா படங்களில் நடிக்கிறார்கள். தெலுங்கிலும், தமிழிலும் டப்பிங் பேசி கஷ்டப்படுகிறார்கள், ஆனால் அது வேலைக்காவில்லை. இன்று நாம் எங்கும் சென்று கொண்டிருக்கும் படங்களை உருவாக்குகிறோம். என கூறியுள்ளார்.
சமீபத்தில் நாடு முழுவதும் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்றுக்கொள்ளுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா குடிமக்களை வலியுறுத்திய சில வாரங்களுக்குப் பிறகு சுதீப்பின் இந்த எதிர்ப்பு குரல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
