92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. ஆண்டுதோறும் சினிமா  துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. சினிமா துறையின் மிகப்பெரிய கெளரவமான ஆஸ்கர் விருது விழாவை காண ஏராளமான திரைத்துறை பிரபலங்கள் பங்கேற்றனர். 

சென்ற ஆண்டை போலவே தொகுப்பாளர்கள் யாரும் இல்லாமல் தான் இந்த முறையும் விழா நடைபெற்றது. இந்த முறை அனைவருக்கும் ஆஸ்கர் விருது விழாவில் மிகப்பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது. காரணம் தென் கொரிய படமான பாரசைட்டுக்கு சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்ததை பலரும் தங்களது கண்கள் விரிய ஆச்சர்யத்துடன் பார்த்தனர். ஏன் என்றால் ஆங்கிலம் அல்லாத பிறமொழி படம் ஒன்றிற்கு சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். 

இந்நிலையில் பாரசைட் படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த சர்வதேச ஃபீச்சர் பிலிம், ஒரிஜினல் திரைக்கதை என்று நான்கு பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது. பாரசைட் படத்திற்கு 4 விருதுகள் கிடைத்தது. அந்த படக்குழுவினரை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்றுள்ளது என்றாலும், பிறமொழி படங்களை எடுப்பவர்களுக்கு தனி உற்சாகத்தை கொடுத்துள்ளது.