'இறுதிச்சுற்று' புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'சூரரைப் போற்று'. ஏர் டெக்கன் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில், மாறா என்ற கேரக்டரில் சூர்யா நடிக்கிறார். பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.


மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'சூரரைப் போற்று' படத்தின் ஃபர்ஸ்ட்லுக், கடந்த நவம்பர்  10ம் தேதி வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியான 24 மணி நேரத்தில், இதுதொடர்பாக ஒரு மில்லியன் பேர் ட்வீட் செய்து சமூக வலைதளத்தையே அசரடித்துள்ளனர். 

அத்துடன், ஒரு நாள் முழுவதும் டுவிட்டரில் டிரெண்டிங்கில் இருந்தும் சாதனை படைத்துள்ளது.'சூரரைப் போற்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்த அதிரிபுதிரியான வரவேற்பால் படக்குழு மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளது. அதனை வெளிப்படுத்தும் விதமாக, படத்தின் அடுத்த அப்டேட்டும் வெளிவந்துள்ளது. 


இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், "'சூரரைப் போற்று' படத்தின் டீசருக்கான தீம் மியூசிக் தயாராகிவிட்டதாகவும், இந்த தீம் மியூசிக், 'மாறா மாறா' என்று அழைக்கப்படும் என்றும், மாறா விரைவில் வெளிவரும்" என்றும் தெரிவித்துள்ளார். 

இதன்மூலம், 'சூரரைப் போற்று' படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது. ஜிவி பிரகாஷின் இந்த டுவிட்டுக்கு, சூர்யா ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் 'சூரரைப் போற்று' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். 

கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கும் இந்தப் படத்திற்கு நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங்கை சதீஷ் சூர்யா கவனிக்கிறார். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'சூரரைப் போற்று' படம், வரும் 2020ம் ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.