கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் சரிதா நாயர் உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என கோவை குற்றவியல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சோலார் பேனல் முறைகேடு விவகாரம் மாநிலத்தை உலுக்கியது. இது தொடர்பாக நடிகை சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். பின்னர், சரிதா நாயர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர், காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த பலரும் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டினார். மேலும், அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹிபி ஈடன் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார். இது கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அம்மாநிலத்தில் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் சோலார் பேனல் மோசடி புகாரில் சரிதாநாயர் சிக்கியுள்ளார். இவர் கோவை வடவள்ளியில் நிறுவனம் நடத்தி, காற்றாலை அமைத்துக் கொடுப்பதாக அறிவித்தார். இதையடுத்து, வடவள்ளியை சேர்ந்த தியாகராஜன் ரூ.28 லட்சமும், ஊட்டியை சேர்ந்த வெங்கட்ரமணன், ஜோயோ ஆகியோர் ரூ.5½ லட்சமும் கொடுத்தனர். ஆனால் சரிதா நாயர் குறிப்பிட்டபடி காற்றாலை அமைத்து கொடுக்கவில்லை.

இதுதொடர்பாக சரிதா நாயர், அவரின் முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் மற்றும் மேலாளர் ரவி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், சரிதா நாயர் பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் குற்றவாளி என கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தண்டனை விவரத்தை நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.