திரைப்படங்களில் நடிகர்கள் புகைபிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றால், சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. டி.வி. மற்றும் சினிமாவில் அதுபோன்ற காட்சிகளை பயன்படுத்துவது புகையிலை தடுப்பு சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த தடாலடி முடிவால் துருவ் விக்ரம், ராதிகா சரத்குமார் இருவரும் புது சிக்கலில் சிக்கிக்கொண்டுள்ளனர். 

சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான "ஆதித்ய வர்மா" திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் காட்சிகள் மற்றும் துருவ்வின் நடிப்பு ஆகியன ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் படத்தில் ஹீரோ, ஹீரோயின் இடையேயான ரொமான்ஸ் காட்சிகளை விட, புகைபிடிப்பது, மது குடிப்பது போன்ற காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருந்தன. அதனால் தான் படத்திற்கு 'ஏ' சர்டிபிகேட் வழங்கப்பட்டது. இந்நிலையில் துருவ் விக்ரமிற்கு பொது சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோன்று பிக்பாஸ் பிரபலம்  ஆரவ் நடித்துள்ள "மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்." படத்தின் போஸ்டரில் ராதிகா சரத்குமார் சுருட்டு பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இதில் ஆரவுக்கு அம்மாவாக நடிக்கும் ராதிகா, வாயில் ஸ்டைலாக சுருட்டை பிடித்தபடி போஸ் கொடுத்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்படத்தின் இயக்குநரான சரண், ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர் ஆகியோருக்கு பொது சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.