கன்னட நடிகர் தர்ஷன் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் சிவராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தர்ஷன். கடந்த 1997 ஆம் ஆண்டு வெளிவந்த மகாபாரதா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஆனால், மெஜெஸ்டிக் படமே அவரை ஹீரோவாக்கியது. தாசா, அண்ணாவ்வுரு, தர்மா, மோனாலிசா, அரசு, பூபதி, கஜா, இந்திரா, பாஸ், பிரின்ஸ், அமர், ஒடேயே, இன்ஸ்பெக்டர் விக்ரம், ராபர்ட் என்று பல படங்களில் நடித்துள்ளார்.
இந்தப் படம் வந்தா என்ன, வரலன்னா என்ன: சசிகுமாரின் காரி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும், பின்னணி பாடகராகவும் திகழ்கிறார். இந்த நிலையில், இயக்குநர் ஹரிகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள கிராந்தி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரச்சிதா ராம், ரவிச்சந்திரன், சுமலதா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இயக்குநரே படத்திற்கு இசையும் அமைத்துள்ளார்.
இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹோசபேட் என்ற பகுதியில் நடந்த கிராந்தி படத்தின் புரோமோசன் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது அவருடன் நடிகை ரச்சிதா ராமும் சென்றிருந்தார். நடிகர், நடிகைகளைக் காண ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. ரச்சிதா ராம் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்திலிருந்து யாரோ ஒருவர் தர்ஷன் மீது காலணியை வீசி எறிந்துள்ளார். அது அவரது தோள்பட்டையில் விழுந்தது. இதையடுத்து, மைக்கை வாங்கி சகோதரா இது உன்னோட தவறில்லை என்று பொறுமையாகவும், அமைதியாகவும் பதிலளித்துள்ளார்.
ஆனால், கூட்டத்திலிருந்து யார் எறிந்தார்கள் என்பது குறித்து விரிவான தகவல் இல்லை. இதைத் தொடர்ந்து தர்ஷன் மற்றும் ரச்சிதா ராம் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இச்சம்பவம் குறித்து நடிகர் சிவராஜ்குமார் வீடியோ வெளியிட்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் தர்ஷனுக்கும், அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். அதோடு, அவ்வப்போது பெண்கள் மீது தனக்கு இருக்கும் வெறுப்பை காட்டி வரும் நிலையில், இது போன்று சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
