'ஒரு நாள் கூத்து' படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷ் இயக்கத்தில், எஸ்.ஜே . சூர்யா மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள மான்ஸ்டர் திரைப்படம், கடந்த வாரம் திரைக்கு வந்தது.  இந்த படத்தில் பூச்சிகளுக்கு கூட தீங்கு நினைக்காத வள்ளலாரின் பக்தராக வாழும், எஸ்.ஜே.சூர்யாவின் வீட்டில் நுழையும் ஒரு எலியின்  தொந்தரவால் அவர் எப்படி மாறுகிறார் என்பதை மையமாக வைத்து காமெடியாக, இந்த படம் உருவாகியுள்ளது.

அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த படம் தற்போது திருட்டு கதை என்கிற புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அதாவது 1997 ஆம் ஆண்டு, வெளியான 'மவுஸ்ஹன்ட்' என்கிற ஆங்கில படத்தின் காப்பி என ஒரு சிலர் விமர்சித்து வருகின்றனர்.  காரணம் இந்த படம் முழுக்க முழுக்க எலியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். 

இது போன்ற விமர்சனங்கள் எழுந்த போதிலும்,  இந்தப் படத்திற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தை 'மாயா', 'மாநகரம்', ஆகிய படங்களை தயாரித்த 'பொட்டன்ஷியல்' ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.  ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்தை கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.