'பேட்ட' படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 167 ஆவது படத்தை, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் துவங்க உள்ளது.

மேலும், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும், படத்தின் பெயர் 'தர்பார்' என நேற்றையதினம் படக்குழுவினர் அறிவித்து ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளதாக ஒரு  தகவல் வெளியானது. இவர் ஏற்கனவே, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' படத்தில்  தன்னுடைய அதிரடியான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்றதால் இந்த படத்திலும் எஸ்.ஜே.சூர்யா நடிக்க வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த தகவலை ரஜினியின் பி.ஆர்.ஓ மறுத்துள்ளார். தற்போது வரை, ரஜினி மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிப்பது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், படக்குழுவினர் அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியிடும் வரை வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறியுள்ளார். இதன் மூலம் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.