சினிமா கைவிட்டாலும், உணவகங்கள் கை விடாது என்பதை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார் நடிகர் சூரி. அவர் நடித்த முதல் படத்தில் அந்த பரோட்டா கணக்கு காமெடியை மக்கள் எப்படி மறக்க முடியாதோ, அதே போல் அவராலும் அந்த காட்சியை மறக்க முடியாததாலோ என்னவோ, படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கும்போதே ஹோட்டல் பிஸினஸில் இறங்கி விட்டார் சூரி. 2017ல் மதுரை காமராஜர் சாலையில் அய்யன், அம்மன் உணவகத்தை தொடங்கினார்.

அந்தத் தொழில் சக்கைபோடு போடவே மீண்டும் உணவக கிளைகளை பெருக்க வேண்டி அம்மன் உயர்தர சைவ உணவகம் மற்றும் அய்யன் உயர்தர அசைவ உணவகம் ஆகிய இரண்டு புதிய கிளைகளை மதுரை அவனியாபுரம், ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் துவக்கி புதுக்கணகை துவங்கி இருக்கிறார் சூரி. இந்த புதிய உணவகங்களை சூரியின் உடன் பிறவா சகோதரரான நடிகர் சிவகார்த்திகேயன் இன்று குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.

பல பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் அம்மன் உயர்தர சைவ உணவகம் மற்றும் அய்யன் உயர்தர அசைவ உணவகத்தின் திறப்புவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திறப்புவிழாவிற்கு வருகைதந்து வாழ்த்திய அனைவருக்கும் நடிகர் சூரி மற்றும் குடும்பத்தினர் தங்களது நன்றியினை தெரிவித்தனர்.

சூரிக்கு ஒரு ஐடியா... வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா சாப்பிடும் காமெடி போட்டியை சீரியஸாக உங்கள் ஹோட்டலில் வைத்தால் வியாபாரம் பிச்சுக்கிட்டு ஓடும்... மதுரைக்கார பயலுக மாய்ந்து மாய்ந்து கலந்துக்குவாய்ங்க.. போட்டிய எப்பம்ணே ஸ்டார்ட் பண்ணப்போறீங்க..?