லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள டான் படம் வருகிற மார்ச் 25-ந் தேதி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சிபி சக்ரவர்த்தி. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். பிரியங்கா மோகன் ஹீரோயினாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்துள்ள இப்படத்தில் முத்திரக்கனி, குக் வித் கோமாளி ஷிவாங்கி, பால சரவணன், ஆர்.ஜே விஜய், பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி வருகிற மார்ச் 25-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

ஆனால் அன்றைய தினம் டான் படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள ஆர்.ஆர்.ஆர் படமும் மார்ச் 25-ந் தேதி தான் வெளியிடப்பட உள்ளது. இந்த இரண்டும் படங்களுக்கும் ஒரு கனெக்‌ஷன் இருக்கிறது. அது லைகா நிறுவனம் தான்.

டான் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அதேபோல் ஆர்.ஆர்.ஆர் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றி உள்ளது. ஆதலால் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீசானால், தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதோடு, வசூலும் பாதிக்கும் என்பதால், டான் படத்தின் ரிலீஸை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளார்களாம். இதன் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.