ராஜஸ்தானில் எடுக்கப்படவிருந்த பாடல் காட்சி ஒன்றை ராமேஸ்வரத்தில் எடுக்கும்படி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உத்தரவிட்டதால் இயக்குநர் பாண்டிராஜும் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருசேர அதிர்ச்சி அடைந்ததாக அப்படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’படத்தை பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். அனு இம்மானுவேல் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனின் தங்கையாக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். வரும் செப்டெம்பர் 27ம் தேதி ரிலீஸாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஒரு பாடல்காட்சி மட்டும் பாக்கி இருந்திருக்கிறது.

அப்பாடலை கொஞ்சம் ரிச்சாக எடுக்க விரும்பிய இயக்குநர் பாண்டிராஜ் ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு லொகேஷன்களைப் பார்த்துவிட்டு மேனேஜர் மூலம் பட்ஜெட் கொடுத்திருக்கிறார். அந்த பட்ஜெட்டைப் பார்த்து அதிர்ந்த சன் பிக்சர்ஸ் தரப்பு ஒரு பாடலுக்காக இவ்வளவு செலவழிக்க முடியாது. தமிழகத்தில் ஏதாவது கம்மியான பட்ஜெட் லொகேஷன் பாருங்கள் என்று உத்தரவிட வேறு வழியின்றி ராமேஸ்வரத்தைத் தேர்வு செய்து நேற்று படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டார்கள். பாடல்காட்சிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்று தயாரிப்பாளர்களின் பணத்தை அழித்துவரும் இயக்குநர்களுக்கு இது ஒரு சரியான பாடம் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள்.