காமெடி, ரொமாண்டிக், ஆக்‌ஷன் என படிப்படியாக முன்னேறி, தற்போது முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன். டி.வி.யில் தொகுப்பாளராக ஆரம்பித்த சிவகார்த்திகேயன் இப்போது தொட்டுள்ள உயரம் சாதாரணமாக கிடைத்தது இல்லை. கடும் விமர்சனங்கள், தொடர் தோல்விகள் இதையெல்லாம் கடந்து நம்ம வீட்டு பிள்ளையாக மாறிய சிவகார்த்திகேயன் இப்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். 

தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடித்த சீமராஜா, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவியது. குறிப்பாக நயன்தாரா, யோகிபாபு, ராதிகா, ரோபோ சங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த மிஸ்டர் லோக்கல் திரைப்படம் ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. மேலும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்தது. 

அப்படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள சிவகார்த்திகேயன், மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்தது முழுக்க, முழுக்க நான் செய்த தப்பு. நான் மிகவும் மரியாதை வைத்திருக்கும் இயக்குநர் ராஜேஷ், அவரிடம் நான் வேறு கதை கேட்டிருக்க வேண்டும் என மனம் திறந்து பேசியுள்ளார். 

இதற்கு முன்னதாக நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட மிஸ்டர் லோக்கல் தோல்வி படம் தான் என சிவகார்த்திகேயன் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.