இயக்குனர் மித்ரன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படம் பற்றி ஒவ்வொரு நாளும், புதிய தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் பெயர் 'ஹீரோ' என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

'கனா' படத்தை தயாரித்து நடித்திருந்த சிவகார்த்திகேயன், இந்த படத்தின் வெற்றிக்கு பின், நடிப்பில் மட்டும் இன்றி படங்கள் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் 'கனா' படத்தை தொடர்ந்து தொகுப்பாளர் ரியோ ராஜ் நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன்  பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன், 'இரும்புத்திரை' பட இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதை தொடர்ந்து நேற்றைய தினம் இயக்குனர் பாலா இயக்கிய 'நாச்சியார்' படத்தில் கதாநாயகியாக நடித்த 'இவானா' முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இதை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கு படக்குழுவினர் 'ஹீரோ' என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து  எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிவகார்த்தியேன் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் நடித்துள்ள 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் மே மாதம் 1 ஆம் தேதி, வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படங்களை தவிர, ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் சிவகார்த்திகேயன்.