காதல் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சிவகார்த்திகேயன் பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து கடந்த 2012 ஆம் ஆண்டு  வெளியான திரைப்படம் 'மெரினா'. இந்த படத்தில் துணை நடிகராக நடித்திருந்தவர் தென்னரசு. மேலும் பல படங்களில் துணைநடிகராக நடித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியை சேர்ந்த இவர், கடந்த மூன்று வருடங்களுக்கு முன் பவித்ரா என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்நிலையில் தென்னரசு, சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் குடித்து விட்டு தினமும் வீட்டுக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால், கணவர் - மனைவிக்கு மத்தியில் தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. பிரச்சனை அதிகமாகி மனைவி திட்டியதால் மனம் உடைந்த தென்னரசு, தன்னுடைய வீட்டில் உள்ள சீலிங் ஃபேனில், மனைவியின் புடவையை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் இந்த தகவல் குறித்து அறிந்த, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.