நடிகர் சிவகார்த்திகேயன் 'சீமராஜா' படத்தை தொடர்ந்து நடித்து வரும் படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வேலைக்காரன் படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா இரண்டாவது முறையாக சிவாவுடன் இணைந்து நடிக்கிறார். 

மேலும் தம்பி ராமய்யா, சதீஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார்த. ஆனால் இது வரை படத்தின் தலைப்பு இந்த படத்திற்கு வைக்கப்படவில்லை. 

ஆனால் இந்த படத்திற்கு தற்போது 'அசால்ட்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. மேலும் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்களும் வைரலாகின. இந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் மறுக்கவில்லை. 

இந்நிலையில், இதே தலைப்பில் ஒரு படம் தயாராகி வருகிறது. அந்த படத்தின் இயக்குனர் பூபதி ராஜா புது குண்டை தூக்கி போட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் நான் நடன இயக்குனராக இருந்து இயக்குனராகி இருக்கிறேன். 'அசால்ட்' என்ற தலைப்பில் 3 ஆண்டுகளுக்கு முன்பு குறும்படம் இயக்கினேன். அந்தப் படத்தை சிவகார்த்திகேயனுக்கு காட்டி உள்ளேன். தற்போது அந்த குறும்படத்தை திரைப்படமாக எடுத்து வருகிறேன். இதில் ஜெய்வந்த், பருத்தி வீரன் சரவணன், செண்ட்ராயன், சோனா நடிக்கிறார்கள். படப்பிடிப்புகள் முடிந்து விட்டது.

படத்தின் தலைப்பை கடந்த மார்ச் மாதம் கில்டில் பதிவு செய்திருக்கிறோம். இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கும் 'அசால்ட்' என்று பெயர் வைத்திருப்பதாக கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது தொடர்பான போஸ்டர்களும் வெளியானது. ஆனால் இது படக்குழுவினரால் வெளியிடப்படவில்லை என்று அறிந்து ஆறுதல் அடைந்தேன். அதேசமயம், தயாரிப்பு தரப்பு இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அதுதான் எங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வெளிப்படையாக கூறிவிட்டால் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும் என்றார். 

ஏற்கனவே பல படங்கள் தலைப்பு பிரச்சனனையை சந்தித்து வரும் நிலையில், தற்போது சிவகார்த்திகேயனுக்கும் இந்த புது பிரச்சனை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.