Sivakarthikeyan : சூப்பர்ஸ்டாருக்கு அப்புறம் என் படம் தான்... கனவை நனவாக்கிய கனா - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
Sivakarthikeyan : கனா படத்துக்கு தற்போது மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இப்படம் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. அங்கு இந்தியன் கேர்ள் என்கிற பெயரில் அப்படம் இன்று ரிலீசாகி உள்ளது.
சிவகார்த்திகேயனின் அசுர வளர்ச்சி
சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக அறிமுகமாகி, பின்னர் தொகுப்பாளராக உயர்ந்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த சிவகார்த்திகேயன், தற்போது தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகனாக வலம் வருகிறார். விஜய், அஜித் ரேஞ்சுக்கு இவரது படங்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதனால் நாளுக்கு நாள் இவரது படங்களுக்கு மவுசு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து தயாரிப்பாளராகவும் அசத்தி வருகிறார். இவர் தயரிப்பில் முதன்முதலாக வெளியான படம் கனா.
கனவை நனவாக்கிய கனா
ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருந்த இப்படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கி இருந்தார். அவர் இயக்கத்தில் வெளியான முதல் படம் இதுவாகும். மேலும் சத்யராஜ், தர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் சாமானிய பெண் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தோலுரித்துக் காட்டியது இப்படம். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்.
சீனாவில் ரிலீஸ்
இந்நிலையில், தற்போது கனா படத்துக்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இப்படம் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. அங்கு இந்தியன் கேர்ள் என்கிற பெயரில் அப்படம் இன்று ரிலீசாகி உள்ளது. இதனால் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ள கனா படக்குழு, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
அதில் பேசிய சிவகார்த்திகேயன், “கனாவை தமிழகம் முழுவதும் அங்கீகரிச்ச மக்களுக்கு நன்றி. உங்களுடைய அங்கீகாரம் தான் இப்போ இந்த படத்தை சீனா வரை கொண்டு போய் உள்ளது. சீனாவில் ரிலீசாகும் இரண்டாவது தமிழ் திரைப்படம் கனா. முதலில் சூப்பர் ஸ்டாருடைய 2.0 ரிலீசாச்சு, இப்போ கனா ரிலீஸ் ஆகியிருக்கு.
இப்படம் சீனாவில் ரிலீசாவதில் என்ன ஸ்பெஷல் என்றால், சீன மொழி அல்லாத மற்ற மொழி திரைப்படங்கள் ஒரு வருஷத்துக்கு குறிப்பிட்ட அளவு தான் ரிலீசாக வேண்டும் என அங்கு ஒரு சட்டம் இருக்கிறது. அவர்கள் தேர்ந்தெடுத்து தான் ரிலீஸ் செய்கிறார்கள். அதில் கனா இருப்பது எங்களுக்கு மிகவும் பெருமை” என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... Blue sattai Maaran : அஜித் ரசிகர்களிடம் அடி வாங்கினாரா ப்ளூ சட்டை மாறன்?... வைரலாகும் போட்டோவின் உண்மை பின்னணி