நடிகர் சிவகார்த்திகேயன், 'மெரினா' படத்திற்கு பின் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'நம்ப வீட்டு பிள்ளை'. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியான திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதால் இம்முறை வெற்றி படத்தை கொடுத்து, முன்னணி நடிகர் என்கிற இடத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும் என இக்கட்டான சூழலில் உள்ளார் சிவகார்த்திகேயன்.

எனவே அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதமாக, கிராமத்து கதை களத்தில் உருவாகியுள்ள 'நம்ப வீட்டு பிள்ளை' படத்தை தேர்வு செய்து நடித்துள்ளார். 

அண்ணன் - தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக , நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். சிவாவுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடித்துள்ளார். 

மேலும் சூரி, பாரதிராஜா, யோகி பாபு, சமுத்திரகனி, ஆர்.கே.சுரேஷ், என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை சென்சார் சான்றிதழுக்காக பட குழுவினர் அனுப்பி வைத்திருந்தனர்.

படத்தை பார்த்த அதிகாரிகள், படக்குழுவினர் எதிர்பார்த்த 'U ' சான்றிதழை கொடுத்துள்ளனர். இதனால் சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.