சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில்  வெளியான படம் ‘சீமராஜா’. பொன்ராம் இயக்கிய இந்தப் படத்தில் கதாநாணகியாக  சமந்தா நடித்தார். சிம்ரன், நெப்போலியன், சூரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். டி.இமான் இசையமைத்தார். இந்தப் படம் சரியாக போகவில்லை.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, தான் முதன்முதலாகத் தயாரித்த ‘கனா’ படத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக சிறிய வேடத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். அருண்ராஜா காமராஜ் இயக்கிய இந்தப் படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியோர் நடித்தனர். இந்தப்படம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. ‘இரும்புத்திரை’ படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இந்தப் படத்தை இயக்குகிறார். ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கோட்டபாடி ராஜேஷின் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.

இந்தப் படத்துக்கு இசையமைக்க யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. இந்நிலையில், 24 ஏஎம் ஸ்டுடியோஸ் பதிவிட்ட ட்வீட் ஒன்றில், அதை உறுதி செய்துள்ளது.

சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களுக்கு அனிருத் மற்றும் டி.இமான் என மாறி மாறி இசையமைத்தனர். பாண்டிராஜ் இயக்கத்தில் விமலுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடித்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்துக்கு மட்டும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார்.

தற்போது, இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்க இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.