பிரபல பாடகி உஷா உதுப்பின் கணவர் ஜானி சாக்கோ உதுப் நேற்று கொல்கத்தாவில் காலமானதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிரபல பாடகி உஷா உதுப்பின் கணவர் ஜானி சாக்கோ உதுப் நேற்று கொல்கத்தாவில் காலமானதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 78 வயதான ஜானி, தங்கள் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது அசௌகரியம் இருப்பதாக புகார் கூறியுள்ளார். இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜானி சாக்கோ மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்..
உஷா உதுப்பின் இரண்டாவது கணவர் ஜானி சாக்கோ. அவர் தேயிலை தோட்ட தொழிலில் உறுப்பினராக இருந்தார். அவரும் உஷாவும் 1970களின் முற்பகுதியில் டிரின்காஸ் என்ற இரவு விடுதியில் சந்தித்தனர். பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு சன்னி என்ற மகன் இருக்கிறார்.. ஜானியின் இறுதிச் சடங்குகள் ஜூலை 9 ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1969-ம் ஆண்டு சென்னை நைட் கிளப்பில் பாடல்களை பாடியதன் மூலம் தனது இசைப்பயணத்தை தொடங்கியவர் உஷா உதுப். அவரின் பாடல்களுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில் பின்னர் டெல்லி நைட் கிளப்பில் பாடல்களை பாடிய போது தான் பழம்பெரும் நடிகர் தேவ் ஆனந்த் அவரை சந்தித்துள்ளார்., பின்னர் அவர் தனது 1971 ஆம் ஆண்டு இயக்கிய ஹரே ராம ஹரே கிருஷ்ணா மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
1970கள் மற்றும் 1980களில் டிஸ்கோ சகாப்தத்தில் இசையமைப்பாளர்களான ஆர்.டி.பர்மன் மற்றும் பப்பி லஹிரி ஆகியோரின் பல ஹிட் பாடல்களைப் பாடினார். தமிழில் எம்.எஸ். விஸ்வநாத இசையில் வெளியான மேல்நாட்டு மருமகள், இதயக்கனி, ஊருக்காக உழைப்பவன் ஆகிய படங்களில் பாடல்களை பாடி உள்ளார்.
1991-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான அஞ்சலி படத்தில் வேகம் வேகம் போகும் நேரம் என்ற ஸ்டைலிஷான பாடலை பாடியிருப்பார். ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா என மொழிகளில் பல ஹிட் பாடல்களை உஷா உதுப் பாடி உள்ளார்.
மேலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார், 2011 ஆம் ஆண்டு 7 கூன் மாஃப் என்ற டார்க் காமெடி படத்தில் பிரியங்கா சோப்ராவின் வீட்டு பணிப்பெண், மேகி ஆன்ட்டியாக மிகவும் பிரபலமானார். தமிழில் மன்மதன் அம்பு படத்தி உஷா உதுப் நடித்திருப்பார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 1, சூப்பர் சிங்கர் 2 ஆகிய நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். 76 வயதான உஷாவுக்கு சமீபத்தில் இந்திய அரசால் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
