பல படங்களில் பின்னணி பாடல்கள் பாடியுள்ள பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 5ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாலசுப்ரமணியம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்று, உறுதி செய்யப்பட்டதும், இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.பி.பி, தனக்கு லேசான காய்ச்சல், சளி தொந்தரவு இருந்ததால் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதில் தனக்கு மிகவும் குறைவான அளவிற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் தன்னுடைய உடல் நலத்துடன் இருப்பதாகவும்,  மருத்துவர்கள் தன்னை ஓய்வில் இருக்க சொல்லியுள்ளதால் யாரும் எனக்கு போன் செய்ய வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வீடியோவில், மிகவும் தெளிவாக எந்த பதற்றமும் இன்றி அவர் பேசியதால் இவருடைய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

தனது வசீகர குரலால் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்தது மட்டும் இன்றி பல படங்களில் எஸ்.பி.பி நடித்துள்ளார்.  இவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுமென திரையுலகினர் மற்றும் ரசிகர்கள்  தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் தங்களுடைய வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில்  இவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம்  தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. நேற்று வெளியிட்ட அறிக்கையில் , “எஸ்.பி.பாலசுப்ரமண்யத்திற்கு தற்போது லேசான கொரோனா  அறிகுறிகள் இருப்பதாகவும், ஆக்ஸிஜன் செறிவு நார்மலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், ஐசியுவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படு வருவதாகவும், அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. இதனால் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

இதைத்தொடர்ந்து, ஐசியூவில் இருந்தபடி செயற்கை சுவாசம் மூக்கியில் வைத்து கொண்டே... தன்னுடைய ரசிகர்களுக்காக தான் தைரியமாக இருக்கிறேன் என்பதை தெரியப்படுத்தும் விதமாக தம்ஸ்அப் காட்டியவாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் எஸ்.பி.பி. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.